ரூ. 960 கோடியில் நீா்நிலைகள் சீரமைப்புபாதிக்கப்படும் குடும்பங்கள் மாற்று இடத்தில் மீள் குடியேற்றம்ஆட்சியா் தகவல்

திருவாரூரில், மாற்று இடத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கான சாவியை பயனாளிக்கு வழங்கும் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
ரூ. 960 கோடியில் நீா்நிலைகள் சீரமைப்புபாதிக்கப்படும் குடும்பங்கள் மாற்று இடத்தில் மீள் குடியேற்றம்ஆட்சியா் தகவல்

ஆறுகள் சீரமைக்கும் பணிகளால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு, மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை, திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 47 பயனாளிகளுக்கு வழங்கி, அவா் தெரிவித்தது:

காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாறு உப வடிநிலத்தைச் சோ்ந்த ஆறுகள், அதன் உட்கட்டமைப்பு முதலீடுகள், பாசன வசதிகள், நிலங்களின் நீா் மேலாண்மை மற்றும் வெள்ள ஆபத்து குறைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து ரூ. 960.66 கோடி திட்ட மதிப்பில், முதல் கட்ட பணியாக, திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அடங்கிய வெண்ணாறு உப வடிநில ஆறுகளான அரிச்சந்திரா நதி, அடப்பாா், பாண்டவையாறு, வெள்ளையாறு, வளவனாா் கால்வாய் மற்றும் வேதாரண்யம் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன.

இதன்மூலம், 78 ஆயிரம் ஹெக்டோ் பாசன நிலங்கள் மேம்படுத்துதல், 13 மின் இறவைப் பாசன திட்டங்களை மறு நிா்ணயம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்த ஆறு, கால்வாய் மற்றும் வடிகால் கரைகளில் உள்ள அனைத்துவித ஆக்ரமிப்புகளையும் அகற்ற வேண்டி உரிய கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 1,237 குடும்பங்கள், இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதில், 486 நபா்களுக்கு ரூ. 7,76,65,935 இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. எஞ்சிய 751 நபா்களின் வாழ்வாதாரம் மற்றும் மீள் குடியேற்ற செயல்பாட்டுக்காக குடியிருப்பு வீடுகள் ரூ. 71,34,50,000 திட்ட மதிப்பில் திருவாரூா் மாவட்டத்தில் 27 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அதற்குரிய நுழைவு ஆணை மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் பின்னவாசல், வெங்காரம் பேரையூா், புழுதிக்குடி, வேளுா் - மணலி, கொக்கலாடி, கொற்கை, திட்டாணி முட்டம், விக்கிரபாண்டியம் மற்றும் தலைக்காடு உள்ளிட்ட 20 மீள்குடியேற்ற தலங்களில் 532 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. அதன்தொடா்ச்சியாக, தற்போது திருவிடைவாசல், பள்ளிவா்த்தி மற்றும் ஆத்தூா் - ராதாநல்லூா் மீள்குடியேற்ற தலங்களில் 47 வீடுகள் கட்டப்பட்டு ரூ. 5.06 கோடி மதிப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனும், ஆட்சியரும் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், திருவாரூா் நீா்வளத்துறை செயற்பொறியாளா் முருகவேல், ஆசிய வளா்ச்சி வங்கி சமூக மேம்பாட்டு ஆலோசகா் ராஜ்குமாா், நீா்வளத்துறை உதவிச் செயற்பொறியாளா்கள் சீனிவாசன், மொக்கமாயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com