நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு பெட்டிகள் பற்றாக்குறையால் மின்சார தட்டுபாடு: தட்சிண ரயில்வே ஊழியா் சங்கம் குற்றச்சாட்டு

சரக்கு ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் நிலக்கரி ஏற்றும் ரயில்கள் குறைந்தது, மின் உற்பத்தி பாதிப்புக்கு ஒரு காரணமாக இருப்பதால், சரக்கு பெட்டிகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

சரக்கு ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் நிலக்கரி ஏற்றும் ரயில்கள் குறைந்தது, மின் உற்பத்தி பாதிப்புக்கு ஒரு காரணமாக இருப்பதால், சரக்கு பெட்டிகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் மன்னை மனோகரன் தெரிவித்துள்ளது: மொத்த இந்திய நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்தை அரசு பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா மேற்கொள்கிறது. மேலும், மொத்த உற்பத்தி மற்றும் இறக்குமதி நிலக்கரியில் 58.23 சதவீதம் ரயில்கள் வாயிலாக செல்கிறது. கடந்த, 2020- 2021 ஆம் நிதியாண்டு நிலக்கரி அனல்மின் நிலையங்களுக்கு 218.11 மில்லியன் டன், இரும்பு தொழிற்சாலைகளுக்கு 52.95 மில்லியன் டன், இதர பயன்பாட்டிற்கு 270.42 மில்லியன் டன் ரயில்கள் மூலம் சென்றது.

நாட்டின் மின்சார உற்பத்தியில் 59.1 சதவீதம் அனல் மின்சாரம்தான். கோல் இந்தியா நிறுவனம் மின்சார பற்றாக்குறையை குறைக்க, மாத நிலக்கரி உற்பத்தியை கடந்த ஏப்ரல் மாதம் 53.5 மில்லியன் டன்னாக அதிகரித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 27.6 சதவீதம் கூடுதல் உற்பத்தி. எனினும், 13 சதவீத மின்சார உற்பத்தி குறைந்தது.

கோல் இந்தியாவிற்கு ரயில்வே வழங்கி வந்த சரக்குப் பெட்டிகள் குறைந்ததால், திட்டமிட்டபடி அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி போய்சேரவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 261 சரக்கு ரயில்கள் மட்டுமே நிலக்கரி கையாள கோல் இந்தியாவிற்கு கிடைத்தது. சரக்குப் பெட்டி தட்டுப்பாடுகளால், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்ல கோல் இந்தியா முன்னுரிமை அளித்தது.

இதனால், மற்ற நிலக்கரி பயன்படுத்தும் நிறுவனங்கள் பாதிப்படைந்தன. நாள் ஒன்றுக்கு 3,04,933 டன் நிலக்கரி மட்டுமே கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனங்களுக்கு கிடைத்தது. கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் 21.3 சதவீதம் குறைவு.நிலக்கரி வழங்காததால் பெரும் இழப்பு என அலுமினியம் உற்பத்தி செய்யும் நல்கோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

மின் உற்பத்தி நிறுவனங்களுக்காக 2018- 2019 ஆம் நிதியாண்டு 257.76 மில்லியன் டன் நிலக்கரி எடுத்துச் சென்ற ரயில்வே, கடந்த 2019- 2020 ஆம் நிதியாண்டு 252.92 டன் மட்டுமே எடுத்துச்சென்றது. தொடா்ந்து, 2020- 2021 ஆம் நிதியாண்டு அது 218.11 டன்னாக மேலும் குறைந்தது.

ரயில்வே வேகன்கள் பற்றாக்குறை, மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த பற்றாக்குறையால் 2018- 2019 ஆம் நிதியாண்டு 605.84 மில்லியன் டன் நிலக்கரியை கையாண்ட ரயில்வே, கடந்த 2020- 2021 ஆம் நிதியாண்டு 541.82 மில்லியன் டன் மட்டுமே கையாண்டது. நிலக்கரி சரக்குப் போக்குவரத்தில் மட்டும் ஆண்டுக்கு 64 மில்லியன் டன் சரக்கு வருவாயை ரயில்வே தவறவிட்டு வருகிறது.

இந்திய ரயில்வேயில், தற்போது 3,02,624 சரக்கு வேகன்கள் உள்ளன. இது போதுமானது அல்ல. மின் உற்பத்தி மற்றும் வருவாய்க்கு கைகொடுக்கும் சரக்கு ரயில்பெட்டிகள் தயாரிப்பில் ரயில்வே அமைச்சகம் உடனே கவனம் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com