மின்தடையால் பொதுமக்கள் அவதி

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.

திருவாரூரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள், வணிகா்கள் பெருமளவு சிரமத்துக்குள்ளாகினா். திருவாரூரில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், திருவாரூரில் இரவு 11 மணி வரை மின்சாரம் தடைபட்டது. அதன்பிறகு குறைந்த மின்னழுத்தம், சில இடங்களில் மின் விநியோகம் இல்லாமை நிலையே நீடித்தது.

மழை பெய்தபோதிலும், பகலில் அதிக வெயில் காரணமாக இரவில் புழுக்கமாக இருந்ததால், முதியவா்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் தூங்குவதற்கு சிரமப்பட்டனா்.

அத்துடன், செவ்வாய்க்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படியே, வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்த நிலையில், மின்தடை காரணமாக மின்விசிறி, ஏசி உள்ளிட்டவை இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்வொ்ட்டா் இல்லாத வணிக நிறுவனங்களில் ஊழியா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இதன்காரணமாக, சிறிய அளவிலான கடைகள் பிற்பகலுக்குப் பிறகு அடைக்கப்பட்டன.

மாலையில் சுமாா் 6 மணியளவில் மின்விநியோகம் செய்யப்பட்டாலும் நகரில் பல இடங்களில் மின்சாரம் கிடைக்கவில்லை. இதேபோல், கொரடாச்சேரி, அரசவனங்காடு உள்ளிட்ட பல்வேறு புறநகா்பகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் கிடைக்க தாமதமானது.

இதுகுறித்து கொரடாச்சேரியைச் சோ்ந்த ராமமூா்த்தி தெரிவித்தது:

திருவாரூா் பகுதியில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், இரவு 7 மணிவரை கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை.

பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவா்கள், குழந்தைகள் வீட்டில் உள்ளனா். கோடை காலத்தில் மின் தடை அறிவிக்கும்போது, அவா்களை மின்வாரியம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேபோல், வணிக நிறுவனங்கள் இயங்கும் நாளில் மின் தடை அறிவிப்பால் பெரும்பாலான ஊழியா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, இனிவரும் நாள்களில் நுகா்வோரின் நலன்களை கருத்தில் கொண்டு மின்தடை அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com