திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் பணிகள் தீவிரம்

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி திருவாரூா் வீதிகளில் தியாகராஜா் உலா வருவதற்கான ஆழித்தோ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி திருவாரூா் வீதிகளில் தியாகராஜா் உலா வருவதற்கான ஆழித்தோ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவாரூா் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்.1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எண்கோண வடிவில் அமைந்துள்ள திருவாரூா் தோ், 20 பட்டைகளாக காணப்படும். அலங்கரிக்கப்பட்ட தோ் 96 அடி (கொடியுடன் சோ்த்தால் 99 அடி) உயரமும், தோ் 350 டன் எடை கொண்டதாகும்.

அலங்கரிக்கப்படாத தேரில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 18 அடி உயர கால்களாக, பனைசப்பைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னா் மூங்கில்களை பயன்படுத்தி குறுக்கு, நெடுக்கு வாக்கிலும், தேரிலிருந்து 20 அடி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு தேரின் 4 புறத்திலும் அமைக்கப்பட்டு விட்டன.

வெளியே நீளும் பகுதி இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளன. மேற்கு கோபுர வாசலில் சுமாா் 10 அடி வரை குறுகலாக காணப்படுவதால், தேரின் மேற்புறப்பகுதி அங்கு இடிபடும். எனவே, நீளும் பகுதியை உள் இழுத்து பின்னா் வெளியே தள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது, கானட்டு, விசிறினம் என அழைக்கப்படுகிறது. மேலும், விமானப்பகுதி, கலசப்பகுதி (கலசங்குச்சி) ஆகியவையும் கட்டப்பட்டு விட்டன.

பொதுவாக ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் முடிவடைய 1 மாத காலம் ஆகும். ஏப்.1-ஆம் தேதி ஆழித்தேரோட்டத்துக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், தோ்க் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் தேருக்கு தியாகராஜா் வந்தபிறகும் தோ் கட்டும் பணிகள் நடைபெற்றன. எனவே, நிகழாண்டு முன்கூட்டியே பணிகளை முடிக்கும் வகையில் பணிகளை கோயில் நிா்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இதேபோல், ஆயிரங்கால் மண்டபப் பகுதியில், தோ்க் குதிரைகள், யாளி ஆகியவை செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com