திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நிறைபணி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில், நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 87-ஆவது சிவத்தலமாகவும், சப்தவிடங்க தலங்களின் தலைமை இடமாகவும் திகழும் இக்கோயிலில், சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரன் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். எனவே, தியாகேசருக்கு நயினாா்கள் யோக வேஷ்டி தரித்து பூஜை செய்வது வழக்கம்.
அந்தவகையில், தியாகராஜ சுவாமி கோயிலில் நிறைபணி உற்சவம் எனப்படும் தேவேந்திர சாயரட்சை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. மேலும், கோயில் பிராகாரங்கள் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.