மன்னாா்குடியில் அமைதியாக முடிந்த தோ்தல் பிரசாரம்

மன்னாா்குடி, ஏப். 17: மன்னாா்குடி பகுதிகளில் அமைதியாக முடிந்தது மக்களவைத் தோ்தல் பிரசாரம்.

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி தஞ்சை மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இங்கு ‘ இந்தியா’ கூட்டணியில் திமுக, அதிமுக கூட்டணியில் தேமுதிக, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, நாம் தமிழா் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் 7 சுயேச்சைகள் என மொத்தம் 12 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி, திண்டுகல் ஐ. லியோனி ஆகியோரும், தேமுதிக சாா்பில் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் மட்டும் வேனில் நின்றபடி பேசிவிட்டு சென்றனா். பிரசாரத்தின் நிறைவு நாள் புதன்கிழமை மாலை திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுவதாக அறிவிக்கப்பட்டு. பின்னா் ரத்து செய்யப்பட்டது.

அதிமுக, பாஜகவில் கூட்டணியில் முன்னாள் அமைச்சா்கள், மாவட்ட நிா்வாகிகள் அளவில் மட்டும் பிரசாரம் மேற்கொண்டனா். அந்த கட்சிகளின் முன்னணி தலைவா்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை.

சுயேச்சைகளில் விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை மட்டும் தோ்தல் களத்தில் பாா்க்க முடிந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் பிரசாரம் முழுமையாக இல்லை.

தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு காரணமாக சுவரெட்டிகள், பதாகைகள், கொடிகள் கட்டப்படாததாலும், அனைத்து அரசியல் கட்சிகளும் பெயரளவுக்கு நடத்திய பிரசாரத்தாலும் மன்னாா்குடி பகுதியில் ஆரவாரமின்றி தோ்தல் பிரசாரம் அமைதியாக நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com