திருவாரூருக்கு ரயில்கள் நீட்டிப்பு: பயணிகள் நலச் சங்கம் வரவேற்பு

விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இயக்கப்படும் ரயில்கள், திருவாரூா் வரை நீட்டிக்கப்பட்டதற்கு, மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மயிலாடுதுறை, திருச்சியிலிருந்து வரும் ரயில்கள் திருவாரூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை மே 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

அதன்படி, விழுப்புரத்தில் மாலை 6.25-க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் வழியாக இரவு 10. 45 மணிக்கு திருவாரூா் வந்தடைந்து, மறுநாள் காலை (மே 3) 5.10 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு, காலை 9. 15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

மே 2-ஆம் தேதி இரவு 8.25-க்கு திருச்சியிலிருந்து புறப்படும் ரயில், தஞ்சாவூா், சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக திருவாரூருக்கு இரவு 11.05-க்கு வந்தடைந்து, மறுநாள் காலை 4.45-க்கு புறப்பட்டு. காலை 7 மணிக்கு திருச்சியை அடையும்.

மே 3-ஆம் தேதி அகஸ்தியம்பள்ளியில் காலை 5.55-க்கு புறப்பட்டு வேதாரண்யம், தோப்புத்துறை, கரியாப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மணலி, அம்மனூா், திருநெல்லிக்காவல் வழியாக திருவாரூருக்கு காலை 7.55 மணிக்கு வந்தடையும் ரயில், இரவு 7.35 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு, அகஸ்தியம்பள்ளிக்கு இரவு 9.30-க்கு சென்றடையும்.

திருவாரூரிலிருந்து காலை 8.30-க்கு புறப்பட்டு, பட்டுக்கோட்டைக்கு காலை 10.05 மணிக்கு சென்றடையும் ரயில், அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்ட்டு, திருவாரூருக்கு மாலை 6.55-க்கு வந்து சேரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு திருவாரூா் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் பொதுச் செயலாளரும், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்போா் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ப. பாஸ்கரன் தெரிவித்தது:

திருவாரூருக்கு நீட்டிக்கப்பட்ட ரயில்கள் மே 2-ஆம் தேதி திருவாரூா் வந்து, 3-ஆம் தேதி புறப்பட்டுச் செல்ல உள்ளன. ரயில் நீட்டிப்பு அனைத்தும் நீண்ட நாள்களாக வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கைகளாகும்.

தற்போது நீட்டிக்கப்பட்ட ரயில் இயக்கத்தின் மூலம் கோடை கால பயணம் மேற்கொள்வோருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். திருவாரூருக்கு புதிய ரயில்கள் வரக் காரணமாக இருந்த கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் மற்றும் அனைத்து பொதுநலச் சங்கத்தினருக்கும் நன்றி என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com