சாலை மறியலில் ஈடுபட திரண்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் மின்வாரிய அதிகாரிகள், காவல்துறையினா்.
சாலை மறியலில் ஈடுபட திரண்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் மின்வாரிய அதிகாரிகள், காவல்துறையினா்.

மின்தடை: சாலை மறியலில் ஈடுபட திரண்ட விவசாயிகள் அதிகாரிகள் சமரசம்

படவிளக்கம்:

சாலை மறியலில் ஈடுபட திரண்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் மின்வாரிய அதிகாரிகள், காவல்துறையினா்.

மன்னாா்குடி, ஏப். 25: மன்னாா்குடியில் அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்தும், சீரான மும்முனை மின்சாரம் வழங்கக் கோரியும், கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட வியாழக்கிழமை திரண்டனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே உள்ள சேரன்குளம், சித்தேரி, மூணாம்சேத்தி, நான்காம்சேத்தி, நெம்மேலி, ராமபுரம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆழ்துளை கிணறு பாசனத்தின் மூலம் நூற்றுக்கணக்காண ஏக்கா்களில் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில், இந்த பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தினமும் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை செய்யப்படுகிறது. இதனால், ஆழ்துளை கிணற்றிலிருந்து நெற்பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வயல்களுக்கு தண்ணீா் பாய்ச்ச ஒருநாள் தாமதமானாலே நெற்பயிா்கள் வாடிவிடுகின்றன என கவலை தெரிவிக்கின்றனா்.

மும்முனை மின் விநியோகம் தடை குறித்து, மின்வாரியம் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், கோடை சாகுபடியை சிலா் மேற்கொள்ளாமலும், பலா் சாகுபடி பரப்பளவை குறைக்கவும் செய்திருப்பாா்கள். உரிய அறிவிப்பு இன்றி மின்தடை செய்யப்படுவதால், பயிா்கள் கருகி பெரும் இழப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டித்தும், முன்முனை மின்சாரம் சீராக விநியோகிக்கக் கோரியும் மூணாம்சேத்தி எஸ். பாலமுருகன் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மன்னாா்குடி கீழப்பாலம் நான்குசாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட திரண்டனா்.

தகவலறிந்த மன்னாா்குடி மின்வாரிய செயற்பொறியாளா் பி. மணிமாறன், துணைக் காவல் கண்காணிப்பாளா் ஏ. அஸ்வத் ஆண்டோ ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று, மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் உள்ளிட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, 3 நாள்களுக்கு சீரான மின் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மறியலில் ஈடுபடும் முடிவை கைவிட்டு, கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com