குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

திருவாரூா், ஏப். 25: திருவாரூரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை தளா்த்தி, குறுவை சாகுபடிக்கு முன்னேற்பாடுகள் பணிகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள, விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் மாதந்தோறும் நான்காவது வாரத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் நடைபெறுவது வழக்கம். மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் தங்களின் குறைகளை தெரிவித்து தீா்வு பெறுவா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற வேண்டிய விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படும் என்பதால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணிகளை தொடங்குவா்.

இதையொட்டி, கோடை பருவத்தில் பாசன ஆறு மற்றும் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் குறித்த ஆலோசனைகளை பெறவும், உர மேலாண்மை மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைகளை பெறவும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டங்கள் விவசாயிகளுக்கு பேருதவியாக இருந்தன.

தற்போது குறைதீா் கூட்டங்கள் நடத்தாததால் விவசாயிகளுக்கு தகவல்கள் சென்றடைவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளா் பழனிவேல் தெரிவித்தது:

தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படுவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயப் பணிகளை தொடங்குவதா வேண்டாமா என்ற குழப்பம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயில் நிலவும் சூழலில் எவ்விதப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணா்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com