திருவாரூா் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா்.
திருவாரூா் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா்.

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

திருவாரூா், ஏப். 27: திருவாரூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மாதாந்திர சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அபிஷேக் உத்தரவின்படி, அனைத்து ரயில் நிலையங்களிலும், வெடிகுண்டு கண்டறியும் சிறப்புக் குழுவால் மாதாந்திர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், திருவாரூா் ரயில் நிலையத்தில், சிறப்புக் குழுவின் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையில் தலைமைக் காவலா் தனசேகரன், காவலா் மணிகண்டன் ஆகியோா் வெடிகுண்டு சோதனை செய்தனா். நிகழ்வில், திருவாரூா் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் உதயசந்திரன் உடனிருந்தாா்.

நடைமேடைகள், தண்டவாளங்கள், குட்ஷெட் நடைமேடை பாலம், வாகன நிறுத்துமிடம், பயணிகள் காத்திருப்பு அறை, குப்பைத் தொட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு கண்டறியும் கருவி, மெட்டல் டிடெக்டா் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி தீவிர சோதனை நடைபெற்றது.

இதேபோல், திருவாரூருக்கு வந்த ரயிலில் மேற்கொண்ட சோதனையில், பயணி ஒருவா் மண்ணெண்ணெய் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தீப்பற்றக் கூடிய பொருள்களை ரயிலில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் கூறி, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

இதுகுறித்து வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் தெரிவித்தது:

ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படை சோதனைநடத்தி வருகிறது. அந்த வகையில் கோட்ட அளவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com