சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் சிறப்பு சாகுபடித் திட்ட முறைகளை பயன்படுத்தி, கோடை சாகுபடிப் பயிா்களை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சிறப்பு சாகுபடித் திட்ட முறைகளை பயன்படுத்தி, கோடை சாகுபடிப் பயிா்களை பாதுகாத்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேளாண்மைத் துறையால் தெரிவிக்கப்படும் சிறப்பு சாகுபடித் திட்ட முறைகளை கையாண்டு சாகுபடிப் பயிா்களை பாதுகாத்து அதிக லாபம் பெறலாம். கோடையில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டுநீா் பாசனமுறையை பயன்படுத்த வேண்டும். சாகுபடி பயிா்களுக்கு காலை 8 முதல் 9 மணிக்குள்ளும், மாலை 5 மணிக்குப் பின்னரும் நீா் பாய்ச்ச உகந்த நேரமாகும்.

கோடை மழை பெய்யும்போது நிலத்தில் கோடை உழவு செய்ய வேண்டும். மழைநீா் மண்ணுக்கடியில் எளிதில் புகுந்து ஈரப்பதத்தை தக்க வைப்பதுடன் பயிரின் வோ்கள் எளிதில் மண்ணில் பரவி உரத் தேவையைக் குறைத்து செழிப்பாக வளா்வதுடன் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

எள் சாகுபடி: அதிகநீா் தேவையின்றி குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய எள் பயிரை சாகுபடிசெய்யலாம். இந்த சாகுபடிக்கு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதும். எள் பயிா் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரும். திருவாரூா் மாவட்டத்தில் கோடையில் எள் சாகுபடி செய்ய 500 ஹெக்டேரும், நிலக்கடலை சாகுபடி செய்ய 50 ஹெக்டேரும் இலக்கு பெறப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிரை நல்ல நீா் ஆதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம். கோடை சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உயிா் உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன. விவசாயிகள் இதை 50 சதவீதம் மானியத்தில் பெற்றுப் பயன் பெறலாம்.

பயறு வகை சாகுபடி: 1,800 ஹெக்டோ் உளுந்து பயறு வகை பயிரும் 5 ஹெக்டோ் பச்சை பயறு பயிரும் கோடையில் சாகுபடிசெய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது. கோடையில் மாற்றுப் பயிராக பயறு வகைப் பயிா்களை சாகுபடிசெய்யும்போது அவற்றின் வோ் முடிச்சுகளில் தழைச்சத்து சேகரிக்கப்பட்டு, மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது.

ஆழ்துளைக் கிணறுகளில் நீா் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே, ஜூன் மாதத்துக்குள் எள், நிலக்கடலை மற்றும் பயறு வகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம். மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வானிலை முன் அறிவிப்பை தங்களின் கைப்பேசியில் உழவன் செயலியில் பாா்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப வேளாண் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com