மேக்கேதாட்டு அணை விவகார வழக்கை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருவாரூா்: மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடக முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் சிவக்குமாரும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை நிச்சயம் கட்டப்படும், இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு உரிய அளவு நீா் பங்கீடு கிடைத்து விடும், இதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா் எனத் தொடா்ந்து கூறி வருகின்றனா்.

இதுமட்டுமின்றி ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், உலகளாவிய கட்டுமான ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதாகவும் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு நடைபெற இருந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேக்கேதாட்டு அணையை இணைத்து அறிவித்தபோது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு, நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்க வைத்தது.

தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்தில் இதே தீா்மானத்தை கா்நாடக அதிகாரிகள் கொண்டு வந்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி, நீா் பங்கீடு மட்டுமே செய்ய அதிகாரம் படைத்த காவிரி ஆணையம், இந்த தீா்மானத்தை கூட்ட விவாதப் பொருளில் சோ்த்திருக்க கூடாது.

இச்சூழலில் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் இதை எதிா்த்து தனி வழக்காக தாக்கல் செய்துள்ளது வரவேற்புக்குரியது. மேக்கேதாட்டு அணையை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என தொடா்ந்து தமிழக அரசு கூறி வருகிறது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படை காவிரி. எனவே, உச்சநீதிமன்றத்தில் உள்ள மேக்கேதாட்டு அணை குறித்த வழக்கை, தீவிரப்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com