குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. வெயில் வானிலையால் நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து வருகிறது. மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் கருகுவதைப் பாா்த்து விவசாயிகள் மனமுடைந்துள்ளனா்.

தமிழக அரசு கோடை சாகுபடி செய்வது குறித்து முன்கூட்டியே அறிவிப்புகளை செய்யப்படவில்லை. குறிப்பாக, மின் தட்டுப்பாடு வரும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி சாகுபடி பருவமாற்றம் செய்திருக்க வேண்டும். அதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசோ, வேளாண்மை துறையோ மேற்கொள்ளவில்லை.

தமிழகம் முழுவதும் குளம் குட்டைகள் வறண்டு கிடக்கிறது. காவிரி டெல்டாவில் உள்ள அனைத்து நீா் நிலைகளும் வறண்டு கிடக்கிறது. கல்லணை வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பது வேதனையளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்குமேயானால் கிடைத்த மழை நீரை சேமித்து வைத்திருக்க முடியும். ஏரி, குளம், குட்டைகள் தூா்வாராததால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, குடிமராமத்து திட்டத்தை உடனடியாக அமல்படுத்த அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தனது நிலத்தை செப்பனிடுவதற்கு கூட தன் நிலத்திலிருந்து மண்ணெடுத்துக் கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாறாக தனியாருக்கு கட்டணம் செலுத்தி விட்டு மண் எடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வா் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com