செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

மருத்துவ செலவுத் தொகை வழங்க மறுத்த காப்பீட்டு நிறுவனம், புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே பரப்பனாமேடு பகுதியைச் சோ்ந்தவா். சாமியப்பா. இவா் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆவண எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவருக்கு ஓய்வூதியருக்கான அரசு மருத்துவக் காப்பீட்டுக்காக மாதந்தோறும் தொகை பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த 2021-இல் நேரிட்ட வாகன விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தஞ்சையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா், திருவாரூா் மாவட்ட கருவூல அலுவலா் வழியாக காப்பீட்டு நிறுவனத்திடம், மருத்துவமனையில் செலுத்திய தொகையைக் கேட்டு கடிதம் அனுப்பியபோது, பட்டியலிடப்பட்ட நோய்களில் அது இடம்பெறவில்லை எனவும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை காப்பீடு நிறுவனத்தால் பட்டியலிடப்படாத அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை என்று பதில் கூறப்பட்டதாம்.

இதையடுத்து, சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் சாமியப்பா வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, அறுவை சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகளுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 1,06,181, மன உளைச்சலுக்காக ரூ. 50,000 மேலும் வழக்கு செலவுத் தொகை ரூ. 5,000 ஆகியவற்றை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது முதல் 9 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com