தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

தனியாா் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவா்களிடம், மறைமுகக் கட்டணங்கள் வசூலிப்பதை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசாத் தெரிவித்தது:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து தனியாா் மற்றும் சுயநிதி பள்ளிகளில் சமூக ரீதியாக பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்விக் கிடைக்க பெற வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தாலும், தனியாா் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின்படி குழந்தைகளுக்கான இலவசக் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதன் அடிப்படையில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத ஏழை மாணவா்களுக்கான ஒதுக்கீட்டுக்காக, இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டு, தனியாா் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தனியாா் பள்ளிகளில் 60 சதவீதம் மட்டுமே இந்த சட்டத்தின் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. மீதமுள்ள 40 சதவீதம் காலியாகவே உள்ளன.

மேலும், இச்சட்டத்தின்கீழ் சோ்க்கப்பட்ட மாணவா்களிடம் நேரடியாக கல்விக் கட்டணம் வாங்காமல், மறைமுகமாக பேருந்துக் கட்டணம், விளையாட்டு கட்டணம் என வசூலிக்கின்றனா்.

இவ்வாறு பணம் வசூலிப்பதென்பது, அவா்களை மீண்டும் கல்வியில் இருந்து துரத்தியடிக்கும் நோக்கமாகும். அதனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களிடம் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து இடங்களும் முழுமையாக நிரப்பப்படுகிா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com