கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

கோடை நெல் சாகுபடிக்கு தேவையான மின்சாரம் வழங்க வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோடை நெல் சாகுபடிக்கு தேவையான மின்சாரம் வழங்க வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது:

திருவாரூா் மாவட்டத்தில் பம்பு செட் வசதி உள்ள இடங்களில் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் கோடை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். இதனிடையே, கடந்த பல நாட்களாக உரிய அளவு மும்முனை மின்சாரம் கொடுக்கப்படாததால், பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய கத்திரி வெயிலில் நெல் பயிா்கள் காய்ந்து, கருகி வருகின்றன. கொடுக்கப்படும் மின்சாரம் பல சமயங்களில் குறைந்த மின்னழுத்தமாக உள்ளதால், மின் மோட்டாா்கள் பழுதாகும் ஆபத்தும் உள்ளது. எந்த நேரத்தில் மின்சாரம் வரும் என்ற நிலையறியாமல் வயல்வெளியில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா்.

தற்போதைய நிலையில் புனல் மின்சார உற்பத்தி உரிய அளவு இல்லாதிருந்தாலும், காற்றாலை மின்சாரம் கூடுதலாக உற்பத்தியாகி வருகிறது.

எனவே, கோடை நெல் சாகுபடியை பாதுகாக்க குறைந்தபட்சம் 16 மணி நேரம் இரவு மற்றும் பகல் நேரங்களில் இரு தடவையாக மின்சாரம் வழங்க தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com