திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) முதல் தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாமல் இருந்தது. அனைத்து நாட்களிலும் இயக்க இப்பகுதி வா்த்தகா்களும், ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினரும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதைத்தொடா்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மே 5 முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு, திருத்துறைப்பூண்டிக்கு 7. 06 மணிக்கும், முத்துப்பேட்டைக்கு 7.29 மணிக்கும், பட்டுக்கோட்டைக்கு 7.56 மணிக்கும், காரைக்குடிக்கு 9.35 மணிக்கும் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் மாலை 6 மணிக்கு காரைக்குடியிலிருந்து புறப்பட்டு, பட்டுக்கோட்டைக்கு 7.13 மணிக்கும், முத்துப்பேட்டைக்கு 7.40 மணிக்கும், திருத்துறைப்பூண்டிக்கு 8.03 மணிக்கும், திருவாரூருக்கு 9.25 மணிக்கும் வந்தடையும்.

இதன்மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த பயணிகள், காரைக்காலில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் கம்பன் விரைவு ரயிலுக்கும், மன்னாா்குடியில் இருந்து சென்னை எழும்பூா் வரைச் செல்லும் மன்னை விரைவு ரயிலுக்கும் இது இணைப்பு வண்டியாக அமைந்துள்ளது.

மேலும், திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு மே 3-ஆம் தேதி முதல் டெமு ரயில் இயக்கப்படுகிறது. சனி, ஞாயிறு தவிர வாரத்தில் 5 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இதற்காக, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன், வா்த்தக மேலாளா் ஐ. செந்தில் குமாா், போக்குவரத்து இயக்கவியல் மேலாளா் ரதிப்பிரியா ஆகியோருக்கு பொதுமக்களும், ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com