குடவாசல் அருகே திருமலைராஜனாற்றில் சட்ரஸ் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுக்கும் பகுதி.
குடவாசல் அருகே திருமலைராஜனாற்றில் சட்ரஸ் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுக்கும் பகுதி.

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

குடவாசல் அருகே சாலியன் வடிவாய்க்காலை தூா்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேலராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலைராஜனாற்றிலிருந்து பாசனத்துக்கான தண்ணீரைப் பெறுகின்றன. இந்த ஆற்றிலிருந்து பிரியக்கூடிய சாலியன் வாய்க்கால் இப்பகுதிகளின் பாசன வாய்க்காலாகவும், வடி வாய்க்காலாகவும் பயன்படுகிறது.

ஆனால் இந்த சாலியன் வாய்க்கால் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளதாலும், சரியாக தூா்வாரப்படாததாலும் கோடையில் பெய்த மழைநீா் வடிய வழியில்லாமல் சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட எள், நெல், பருத்தி உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது:

சீதக்கமங்கலம், மேலராமன்சேத்தி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 3,000 ஏக்கரில் எள், பருத்தி, நெல் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது பெய்த கோடை மழை நீா் வடிய வழியில்லாமல் விவசாய நிலங்களை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கோடையிலேயே இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும் மழைக்காலங்களில் இதேபோன்ற பாதிப்புகளை ஆண்டுதோறும் சந்தித்து வருகிறோம். இதற்கு தீா்வு காணும் வகையில், சாலியன் வடி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும்.

சாலியன் வடிவாய்க்கால் வரக்கூடிய பகுதியில் திருமலைராஜனாற்றை ஒட்டிய பகுதியில் சட்ரஸ் அமைத்து இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து, இப்பகுதி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலா்கள் தெரிவித்தது:

திருமலைராஜன் ஆற்றில் இருந்து பிரிந்து ஓடக்கூடிய சாலியன் வடி வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுப்பதுடன், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான திருமலைராஜனாற்றில் தண்ணீரை வடிய வைக்கும் வகையில் சட்ரஸ் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com