டெங்கு, சிக்குன்குனியாவுக்கு தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்!

தில்லியில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தில்லியில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த நோய்களுக்குத் தீர்வாக தமிழக சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் "நிலவேம்பு கஷாயம்' அமைந்துள்ளது.
தில்லியில் குளிர் காலத்துக்கு முந்தைய மழைக் காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றின் தாக்கம் அதிகமாகி வருவது ஆண்டுதோறும் வழக்கமாகி விட்டது. இந்நோய்களைக் கட்டுப்படுத்த ஆங்கில மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நோய் எதிர்ப்பில் அவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்பதைப் பிரபல மருத்துவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். இந்நிலையில்தான் இந்நோய் எதிர்ப்பு சக்திக்கு தமிழக சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் "நிலவேம்பு கஷாயம்' முக்கிய மருந்தாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, டெங்கு, சிக்குன்குனியா நோய் தடுப்புக்காக "நிலவேம்பு கஷாயம்' அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் தற்போதும் நிலவேம்பு கஷாயத்தை அரசே நோயாளிகளுக்கு அதன் சொந்த செலவில் அளித்து வரும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்த வழிமுறையை தில்லியிலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கடைப்பிடிக்கலாம் என்று தில்லியில் பணியாற்றும் தமிழக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: இது குறித்து மருத்துவர்கள் கூறியது: மத்திய "ஆயுஷ்' (ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். தில்லியில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் இடங்களில் நோயாளிகளுக்கு "நிலவேம்பு கஷாயம்' அளிப்பதன் அவசியத்தையும், அது பற்றிய விழிப்புணர்வையும் இம்மருத்துவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதையொட்டி, நடத்தப்படும் முகாம்களில் நிலவேம்பு கஷாயம், நிலவேம்பு பொடி ஆகியவற்றை இம்மருத்துவர்கள் பொது
மக்களுக்கு வழங்குகின்றனர்.
தில்லி ராமகிருஷ்ணாபுரம் செக்டார்-3-இல் உள்ள உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற டெங்கு, சிக்குன்குனியா விழிப்புணர்வு நிகழ்ச்சியில், "ஆயுஷ்' துறை சித்த மருத்துவ ஆராய்ச்சி நிபுணரும் மருத்துவருமான ஜி.செந்தில் வேல் பங்கேற்றார். நிலவேம்பு கஷாயத்தின் பயன் குறித்து அவர் "தினமணி' நிருபரிடம் கூறியது:
நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போதுதான் "நோய்' நம்மை தாக்கும். "நிலவேம்பு கஷாயம்' பருகினால், நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
"நிலவேம்பு' என்பது ஒன்பது வகை மூலிகைகளால் தயாரிக்கப்படும் ஒரு வகை கஷாயம்.  இதன் மூலம் டெங்கு, சிக்குன்குனியா போன்ற 64 வகை காய்ச்சல்களை கட்டுப்படுத்தவும்,   குணப்படுத்தவும் முடியும். இந்நோய்களுக்கான காரணிகளை குறிப்பிட்டு பண்டைய  காலங்களில் சித்தர்கள் இந்த மருந்தை தயாரித்துள்ளனர். ஆனால், நோய்களுக்கு வெவ்வேறு பெயர்களை சித்தர்கள் பயன்படுத்தினர் என்றார் அவர்.
கஷாயம் செய்முறை: கடைகளில் நிலவேம்பு பொடி விற்கப்படுகிறது. அதை வாங்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தில் 100 முதல் 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ஒரு தேக்கரண்டி நிலவேம்பு பொடியை சேர்க்க வேண்டும். சிறிது நேரத்தில் அவை பொங்கி வரும்.
அப்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாகக் குறைந்திருக்கும். அதன்பிறகு அந்த நீரை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் தினமும் பருகினால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் நிலவேம்பு கஷாயத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை என 7 நாள்கள் தொடர்ந்து பருக வேண்டும். காய்ச்சல் வராமல் தடுக்க மாதத்தில் 5 நாள்களில் நாளொன்றுக்கு ஒரு வேளை வீதம் பருகலாம்.
யாருக்கு எவ்வளவு அளவு? 12 வயதுக்கு மேற்பட்டோர் தினமும் 50 மி.லி. தண்ணீரிலும், 5 முதல் 12 வரை உள்ளவர்கள் 20 முதல் 30 மி.லி. தண்ணீருலும் 5 வயதுக்கு  கீழ் உள்ள குழந்தைகள் 5 முதல் 10 மி.லி. தண்ணீரிலும் நிலவேம்பு பொடியைச் சேர்ந்து கொதிக்க வைத்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகலாம் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நிலவேம்பு பொடி கிடைக்குமிடங்கள்
1. எஸ்கேஎம் சித்தா மற்றும் ஆயுர்வேதா நிறுவனம், காஜியாபாத். தொடர்பு எண்: 08870005378
2. கிருஷ்ணா ஜி மார்க்கெட்டிங், வசிஷ்ட் பார்க், பங்கா ரோடு, (ஜனக் சினிமா எதிரில்), ஜனக்புரி. தொடர்பு எண்: 09213945850
3. அபேக்ஸ் ஃபார்மா, ஆயுர்வேதா மற்றும் யுனானி கல்லூரி, அஜ்மால்கான் ரோடு, கரோல் பாக். தொடர்பு எண்: 09818299390


சிகிச்சை பெறும் இடங்கள்
கரோல் பாக்: திவ்யா ஆயுர்வேத மற்றும் யுனானி கல்லூரி.
கனாட் பிளேஸ்: வடக்கு ரயில்வே மருத்துவமனை.
சரிதா விஹார்: அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ மையம்.
லோதி ரோடு: சிஜிஎச்எஸ்,(மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் ).
குடியரசுத்தலைவர் மாளிகை: ஆயுஷ் சிகிச்சை மையம்
(குடியரசுத் தலைவர் மாளிகை பணியாளர்களுக்கு மட்டும்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com