4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநர் கைது

தில்லி புறநகர் பகுதியில் 4 வயது சிறுமி, அவர் பள்ளி சென்று வரும் வேன் ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.

தில்லி புறநகர் பகுதியில் 4 வயது சிறுமி, அவர் பள்ளி சென்று வரும் வேன் ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
இச்சம்பவம் குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
பாபா ஹரிதாஸ் நகரைச் சேர்ந்த அந்தச் சிறுமி கடந்த ஒரு மாதமாக தினமும் வேனில் பள்ளிக்குச் சென்று வருகிறார். அந்த வேனில் 26 வயது இளைஞர் ஒருவர் ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அதில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளில், சம்பந்தப்பட்ட சிறுமியே கடைசியாக வீட்டில் இறக்கி விடப்பட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், அந்த வேன் ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை அந்தச் சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதற்கு முன்பாக அவரை பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன், அதுதொடர்பாக எவரிடமும் கூறக் கூடாது என்று அந்தச் சிறுமியை மிரட்டியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து வீட்டில் இறக்கிவிடப்பட்ட சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை ராவ் துலா ராம் மருத்துவமனையில் அனுமதித்தனர். தான் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை சிறுமி பெற்றோரிடம் விவரித்துள்ளார்.
இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக அந்தச் சிறுமி தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து, போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், வேன் ஓட்டுநரை பாபா ஹரிதாஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவில் கைது செய்தனர். அந்த நபருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது விசாரணையில் தெரியவந்தது என்று போலீஸார் கூறினர்.
ஸ்வாதி மாலிவால் சந்திப்பு: இதனிடையே, பலாத்காரத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை, தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நேரில் சந்தித்தார்.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு,  தில்லி அரசு, தில்லி மகளிர் ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன், "4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 2 மாதங்களுக்குள்ளாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்'என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com