தில்லி அரசு, மத்திய சுகாதாரத் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: சிகிச்சை அளிக்காததால் இளைஞர் இறந்த விவகாரம்

தில்லி அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்காததால் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து

தில்லி அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்காததால் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கும், மத்திய சுகாதாரத் துறைக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
 தில்லியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 22 வயது இளைஞருக்கு கடந்த 12-ஆம் தேதி நெஞ்சு வலியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவசர ஆம்புலன்ஸ் பிரிவுக்குத் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஹெட்கேவார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.  இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் மூன்று மணிநேரம் எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படாமல் அந்த இளைஞர் காக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  
இதையடுத்து, தாஹிர்பூரில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நள்ளிரவில் அந்த இளைஞர் சேர்க்கப்பட்டார். ஆனால், பணியில்  மருத்துவர்கள் இல்லை எனக் கூறி சிகிச்சை மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  
இதையடுத்து நான்கு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்த இளைஞர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
 உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றும், உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் ஆட்டோ ஓட்டுநர் இறக்க நேரிட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பல்வேறு பத்திரிகைகளில் கடந்த 17-ஆம் தேதி செய்தியாக வெளியானது.
இது பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக ஆணையம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி அரசின் தலைமைச் செயலர், மத்திய சுகாதாரத் துறை செயலர் ஆகியோருக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
அந்த நோட்டீஸில், "அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுநருக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக ஊடங்களில் வெளியான செய்தியில் உண்மை இருக்கும்பட்சத்தில், மனித உயிர் மற்றும் மருத்துவக் கவனிப்பு உரிமை மீறலுக்கான மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகி விடும்.
எனவே, இது பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com