"நீட்'  தேர்வில் விலக்கு அளிக்க மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

"நீட்'  தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.

"நீட்'  தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.
"நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க அதிமுக உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் மக்களவைத் தலைவரிடம் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை அளித்திருந்தார். அதேபோன்று,   அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரமும் ஒரு விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை அளித்திருந்தார்.
இந்நிலையில்,   மக்களவை வியாழக்கிழமை காலை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியது.  அப்போது, அதிமுக உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், "நீட்' தேர்வு விலக்கு விவகாரம் குறித்துப் பேசுவதற்கு அனுமதிக்குமாறு கூறினார்.  மேலும்,   பி.ஆர். சுந்தரம்,  அசோக்குமார்,  சத்யபாமா,  ஜி.ஹரி, அருண்மொழித் தேவன்  உள்ளிட்ட  அதிமுக உறுப்பினர்கள்,  "நீட்' தேர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் கொடுத்தனர்.
அப்போது,  ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறிய  மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், "மற்ற அலுவல்கள் இருப்பதால், இந்த விஷயம் குறித்துப் பேசுவதற்கு பிறகு அனுமதி தரப்படும்' என்றார்.
இந்நிலையில்,  பூஜ்ய நேரத்தின்போது  "நீட்' தேர்வு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு வடசென்னை தொகுதி அதிமுக உறுப்பினர் டி.ஜி.எஸ். வெங்கடேஷ் பாபுவுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார்.  இதையடுத்து, நீட் தேர்வால் தமிழகத்தின் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் குறித்து அவர் அவையில் பேசிக் கொண்டிருந்தார்.  இதே விஷயத்தில்  அதிமுக உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், வி.சத்யபாமா ஆகியோர் தங்களை இணைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறினார்.
  இதற்கிடையே,  பி.ஜே.டி.  கட்சி உறுப்பினர்கள் நதி நீர் விவகாரம் தொடர்பாக  அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து,  அவையை  சுமித்ரா மகாஜன் பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
 மாலையில் நடைபெற்ற பூஜ்ய நேரத்தில் "நீட்' தேர்வு விலக்கு விவகாரம் குறித்து கே.என்.ராமச்சந்திரன் பேசுகையில், "நீட் தேர்வு தமிழகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.  "நீட் ' தேர்வு மாநில உரிமைகளில் நேரடி விதி மீறலாக இருப்பதால் அத்தேர்வு அறிமுகத்தை தமிழக முதல்வராக இருந்த  ஜெயலலிதா எதிர்த்தார்.  நீட் தேர்வு மூலம் பிற மாநில மாணவர்களால் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டால் தமிழகத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையும்,  கிராமப்புற பகுதிகளில் மருத்துவ சேவைக்கான மருத்துவர்கள் இல்லாத நிலையும் ஏற்படும். இதனால்,   தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நடைமுறையில் இருந்து வரும் மாணவர் சேர்க்கை முறையைத் தொடரும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com