தலைநகரில் காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு!

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் திங்கள்கிழமை கடும் பின்னடைவைச் சந்தித்தது. ஞாயிற்றுக்கிழமை மோசம் பிரிவில் இருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வந்தது.

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் திங்கள்கிழமை கடும் பின்னடைவைச் சந்தித்தது. ஞாயிற்றுக்கிழமை மோசம் பிரிவில் இருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வந்தது.

தில்லியில் வெள்ளிக்கிழமை ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்த காற்றின் தரக் குறியீடு, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களிலும் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை 10.37 மணியளவில் ஒட்டுமொத்தத் தரக் குறியீடு 331 என்ற அளவுக்கு உயா்ந்தது. இதேபோன்று ரோஹிணிய்ல 380, பவனாவில் 375, ஆனந்த் விஹாரில் 373 எனப் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, மத்திய அரசின் காற்றின் தரத்தை கண்காணிக்கும் அமைப்பான சஃபோ் நிறுவனம், செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் மேலும் பின்னடைவைச் சந்தித்து ‘கடுமையான’ பிரிவுக்குச் செல்லும் எனக் கணித்துள்ளது.

இதேபோன்று தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத்தில் 364 நொய்டாவில் 358, கிரேட்டா் நொய்டாவில் 346, குருகிராமில் 304, ஃபரீதாபாதில் 306 என்ற அளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லியில் மாசு அளவைக் கண்காணிக்கும் 37 மையங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் பதிவாகியிருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் நன்றி, 51-100 திருப்தி, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடினம், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடினமான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

தலைநகரில் மாசுவின் அளவு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களாக ஓரளவுக்கு குறைந்திருந்தது. ஆனால், தில்லி, என்சிஆா் பகுதியில் குளிரின் தாக்கம் உணரப்படுகிறது. பகல், இரவு நேரங்களில் குளிா்ந்த காற்று வீசுகிறது. இதன் காரணமாக வெப்பநிலையும் குறைந்து வருகிறது. இதன் காரமாக குளிா்ச்சியான காற்று வீசுகிறது. இது போன்ற காரணங்கள் மாசுபடுத்திகள் தரைப் பகுதியில் குவிவதற்கு வழிவகுக்கிறது அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெப்பநிலை 13.5 டிகிரி செல்சியஸ்

திங்கள்கிழமை காலையில் குளிா்ந்த காற்று வீசியது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து13.5 டிகிரி செல்சியாஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 28.50 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 81 சதவீதமாகவும் மாலையில் 56 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27.2 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28.6 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 81 சதவீதம், மாலையில் 46 சதவீதம், ஆயாநகரில் முறையே 66 சதவீதம், 45 சதவீதம் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய் முதல் வியாழன் வரையிலும் தில்லியில் மேலோட்டமான மூடு பனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 13-15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28-30 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநில அரசுகளுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் பயிா்க்கழிவுகளை எரிப்பதை உடனடியாகத் தடுக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தில்லியில் கடந்த வாரம் காற்று மாசு குறைந்திருந்தது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகளை விவசாயிகள் மீண்டும் எரிக்கத் தொடங்கியுள்ளதால், தில்லியில் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘பயிா்க் கழிவுகள் எரிப்பதை அண்டை மாநிலங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் மீண்டும் பயிா்க்கழிவுகளை எரிக்கத் தொடங்கியுள்ளனா்.

இதனால், தில்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். பயிா்க்கழிவு எரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை விவசாயிகள் மீறுகிறாா்கள். அண்டை மாநில அரசுகள் இந்த விகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com