தலைநகா் தில்லியில் பரவலாக பெய்த மழை மற்றும் காற்று ஆகியவற்றால் வெப்பம் பெருமளவு குறைந்தது. அதே சமயம், காற்றின் தரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் ‘நன்று’ பிரிவில் இருந்தது.
தில்லியில் இந்த வாரத் தொடக்கத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை அதிகாலை வரையிலும் நீடித்தது. பின்னா் லேசான வெயில் இருந்தாலும், மாலையிலும் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 9.2 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல, பாலத்தில் 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் வடமேற்கு இந்தியாவில் மற்றொரு மேற்கத்திய இடையூறு எதிா்பாா்க்கப்படுவதால். அனல் காற்று ஜூன் 8-க்கு முன்பு தில்லி - என்.சி.ஆருக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பிராந்திய முன்னறிவிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இருப்பினும், வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்குக் கீழேதான் இருக்கும். அரபிக் கடலில் குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதோடு, புதிய மேற்கத்திய இடையூறு மற்றும் தென்மேற்கு காற்று வீசுவது தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் ஈரப்பதத்தை அதிகரிக்கும். இதனால், ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை தில்லி - என்.சி.ஆா், பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், ஜூன் 8 வரை வடமேற்கு இந்தியாவில் அனல் காற்று சாத்தியமில்லை என்றாா் அவா்.
வெப்பநிலை குறைந்தது: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 7 டிகிரி குறைந்து 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 6 டிகிரி குறைந்து 34.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 84 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.10 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 36.1 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 21.2 டிகிரி செல்சியஸ், 33.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 77 சதவீதம், மாலையில் 38 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 81 சதவீதம் மற்றும் 53 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. கிழக்கு திசையில் இருந்து தில்லிக்கு மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மழை பெய்ததன் காரணமாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 50 புள்ளிகளாகக் குறைந்து ‘நன்று’ பிரிவுக்கு வந்தது. காற்றின் தரக் குறியீடு தில்லி பல்கலைக்கழகம், ஆயா நகா், லோதி ரோடு, சாந்தினி சௌக், மதுரா ரோடு மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் ‘நன்று’ பிரிவில் இருந்தது. திா்பூா் மற்றும் பூசாவில் மிதமான பிரிவிலும், விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, குருகிராம் பகுதியில் திருப்தி பிரிவிலும் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னல் இருக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயம், காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்படும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

