நாகரிக மோகத்தால் அழியும் பனை ஓலைத் தொழில்!

பாவூர்சத்திரம், நவ. 11:   நாகரிக மோகம் காரணமாக பனை ஓலைத் தொழிலாளர்களின் வாழ்வு இருளடைந்துள்ளது.   "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது' என்ற பழமொழி உழவுத் தொழில் மட்டுமின்றி பாரம்பரியமான தொ

பாவூர்சத்திரம், நவ. 11:   நாகரிக மோகம் காரணமாக பனை ஓலைத் தொழிலாளர்களின் வாழ்வு இருளடைந்துள்ளது.

  "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது' என்ற பழமொழி உழவுத் தொழில் மட்டுமின்றி பாரம்பரியமான தொழில்கள் அனைத்துக்குமே பொருந்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.

  திருநெல்வேலி மாவட்டத்தில் பனை ஓலை மற்றும் பனை நார் மூலம் கூடை, கொட்டான் முடையும் தொழில் பிரபலம். பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் இத் தொழிலில் ஈடுபட்டு

வருகின்றனர்.

  ஆனால் நாகரிக வளர்ச்சியால் இத் தொழில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

  பனை ஓலை மற்றும் பனை நார்களால் பின்னப்படும் மிட்டாய் பெட்டி, விசிறி, கொட்டான், முறம், பீடித்தட்டு ஆகியன ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்தது.

  பெரிய நகரங்களில்கூட இனிப்புக் கடைகளில் அதிகமாக ஓலைக் கொட்டான்களையே பயன்படுத்தி வந்தனர். அதில் வாங்கி வரும் மிட்டாய் பண்டங்களும் மணம் கமழும். தனிச் சுவையுடனும் இருக்கும்.  ஆனால், இப்போது இனிப்புக் கடைகளில் பாலிதீன் பைகளும், பிளாஸ்டிக் பைகளுமே பயன்படுத்தப்படுகின்றன.

  பீடித் தொழிலாளர்கள் பனை ஓலையால் பின்னப்பட்ட பீடித்தட்டுகளையே பயன்படுத்தி வந்தனர். தற்போது பிளாஸ்டிக் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், பனை ஓலை பீடித்தட்டுகளின் விற்பனை குறைந்துவிட்டது. சொளவு பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. அத்துடன் இத் தொழிலில் வருமானமும் குறைந்துவிட்டது.

  1000 ஓலைக் கொட்டான்கள் விற்றால் 500 ரூபாய்தான் கிடைக்கிறது. ஒருநபர் ஒரு நாளைக்கு 250 முதல் 300 கொட்டான்களையே செய்ய முடியும். அதன்மூலம் அதிகபட்சமாக 150 ரூபாய்தான் கிடைக்கும். இதில் மூலதனமாக பனை ஓலை மற்றும் நார் வாங்குவது, போக்குவரத்துச் செலவு என கணக்குப் பார்த்தால் கூலியாக 50 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

  ""ஓலைக் கொட்டான்களை அதிகமாக சங்கரன்கோவில், மதுரை, சிவகாசி ஆகிய நகரங்களுக்கு அனுப்புகிறோம். வாரம் ஒருமுறைதான் அனுப்ப முடிகிறது. முதலில் அனுப்பிய கொட்டான்கள் விற்ற பின்னரே இந்த கொட்டான்களை வாங்குவர்.

  அதுவரை பிழைப்பு நடத்துவது கஷ்டமாக உள்ளது'' என இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகின்றனர்.  தற்போது "கேரி பேக்' ஆதிக்கம் வந்துவிட்டதால் கொட்டான்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

  முன்னர் புதுமணத் தம்பதிகளுக்கு கிராமங்களில் சீதனமாகக் கொடுக்கும் பலகாரங்களை ஓலைப்பெட்டிகளில் வைத்து கொடுத்தால்தான் மவுசு எனக் கருதினர். தற்போது அந்த நிலையில்லை.

  பனை ஓலைப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அத்துடன் கிருமி நாசினியாகவும் இருந்தது. இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பனை ஓலை மற்றும் நார்களால் செய்யப்படும் பொருள்கள், நாகரீக மோகத்தால் நலிவடைந்துள்ளது. அதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com