நலிவடையும் பீடித் தொழிலாளர்கள்!

பாவூர்சத்திரம், அக். 18:     திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரதான தொழிலாக விளங்கி வரும் பீடி சுற்றும் தொழில், தற்போது பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது. இத் தொழிலையே நம்பி வாழும் தொழி

பாவூர்சத்திரம், அக். 18:     திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரதான தொழிலாக விளங்கி வரும் பீடி சுற்றும் தொழில், தற்போது பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது. இத் தொழிலையே நம்பி வாழும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  திருநெல்வேலி மாவட்டத்தில் லட்சக்கணக்கான குடும்பத்தினர் பீடி சுற்றும் தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்டத்தில் இத் தொழில் சிறிது சிறிதாக நலிவடைந்து வருகிறது.

  இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பீடிக் கடைகளில் கொடுக்கப்படும் தரம்குறைந்த இலையால், தேவையான பீடி கிடைக்காமல் விலை கொடுத்து இலை வாங்க வேண்டியுள்ளது. இதனால் பீடிசுற்றுவதற்குத் தரப்படும் கூலியைவிட அதிக அளவு செலவாகிறது.

  மூலப்பொருள்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் அதிகப்படியான கூலி எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் சிறிய பீடி நிறுவனங்கள் தற்போது நலிவடைந்துள்ளன.

  சில நிறுவனங்கள் தீப்பெட்டி, சோப்பு, தலைவலி தைலம் உள்பட பல்வேறு தயாரிப்புகளில் இறங்கிவிட்டன.

  பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த லாபத்தில் வீட்டு உபயோகப் பொருள்களைக் கொடுத்து இழப்பை சரிக்கட்டி வருகின்றன.

  பீடித் தொழில் நலிவடைந்து வருவதால் பல ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

  இதனால், அவர்கள் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்பாலைகள், காகித ஆலை போன்றவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் சென்று வருகின்றனர்.

  ஆனால், கடையம், பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாததால் பீடித் தொழிலைக் கைவிட்டவர்கள் வருமானம் இன்றி வாடுகின்றனர்.

  தற்போது மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அரசு தொழில்கடன் வழங்கிவருகிறது.

  இதனால், சில குடும்பத்தினர் அதைக் கொண்டு சிறிய அளவில் தொழில் செய்து வருகின்றனர்.

வட்டி பீடி:   மேலும், இத் தொழிலுக்கு மற்றொரு வகையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் நடைபெறும் கந்து வட்டி போன்று "வட்டி பீடி' தொழிலும் கொடிகட்டிப் பறக்கிறது.

  பீடி நிறுவனங்கள் கொடுக்கும் மூலப்பொருள்களுக்கு ஏற்றவாறு இல்லாமல் பீடிக்கட்டுகள் குறைந்தால், அதை சரிக்கட்ட பீடித் தொழிலாளர்கள் நாடுவது இந்த "வட்டி பீடி'யைத்தான்.

  அதாவது 10 கட்டுகள் பீடி வாங்கினால், மறுநாள் ஒரு கட்டு வட்டி போட்டு 11 கட்டுகள் கொடுக்க வேண்டும்.

  "வட்டி பீடி' கட்ட முடியாத பெண்கள் பலர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

  அத்துடன் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ள இளம் பெண்களுக்கு காசநோய் போன்ற கொடிய நோய்கள் தாக்குவதால் பலர் மாற்றுத் தொழிலை நாடிச் சென்றுவிடுகின்றனர்.  இவ்வாறு பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மாற்று வேலை வழங்க அனைத்துப் பகுதிகளிலும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com