ராமநதி அணை அருகே ​ ஜம்பு நதி கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படுமா?

பாவூர்சத்திரம், செப். 20: ராமநதி அணை அருகே காமராஜர் அடிக்கல் நாட்டிய ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையத்துக்கு மேற்கே ராமநதி அணை

பாவூர்சத்திரம், செப். 20: ராமநதி அணை அருகே காமராஜர் அடிக்கல் நாட்டிய ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையத்துக்கு மேற்கே ராமநதி அணைக்கட்டு அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 1962-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ராமநதி, கடனாநதி அணை மற்றும் ஜம்புநதி மேல் மட்டக் கால்வாய்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1974-ம் ஆண்டு இந்த அணைகளை தமிழக முதல்வர் கருணாநிதி அப்போது திறந்துவைத்தார்.

ஆனால், ஜம்புநதி கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கடையம் பெரும்பத்து தோரணமலைக்கும், குலுக்கமலைக்கும் மேற்குப் பகுதியில் ஜம்புநதி உற்பத்தியாகிறது. இந்நதி மூலம் கிடைக்கும் நீர் அதன் பாசனப் பகுதிகளான குத்தாலப்பேரி குளம், நாராயணப்பேரி குளம் ஆகிய 2 கண்மாய்களில் உள்ள குளங்களின் விவசாயப் பணிகளுக்குப் போதுமானதாக இல்லை. இதன் தெற்குப் பகுதியில் ராமநதி உற்பத்தியாகிறது.

இந்நிலையில், பருவமழை நேரங்களில் ராமநதி அணையின் முழு கொள்ளளவான 84 அடி அளவும் நிரம்பிவிடும். பின்னர் அணை நிரம்பிய நிலையில் அதன் உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் அதிகமான தண்ணீர் வீணாகிறது. அணையின் உபரிநீரை ஜம்புநதியில் உள்ள இரண்டாவது அணை மூலம் 100-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் பயன்பெறும் வகையில் ராமநதி அணையின் மேல்மட்டக் கால்வாய்த் திட்டம் தயாரிக்கப்பட்டது.

மேலும் இத் திட்டம் நிறைவேறி கால்வாய் வெட்டப்பட்டால் ஆவுடையானூர், திப்பணம்பட்டி வெங்கடாம்பட்டி, அனந்தபத்மநாயக்கர் குளம், வடக்கு மடத்தூர் குளம், தெற்குமடத்தூர் குளங்களும் பயன்பெறும். இத் திட்டத்தின் மூலம் 81.16 ஹெக்டேர் நிலங்கள் பாசன இடைவெளியை நிரப்பும். 299.18 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.

இதன்மூலம் ஜம்பு நதியில் இரண்டாவது அணைக்கட்டான நாராயணப்பேரியில் உள்ள 4 கண்மாய்களும், கடைசி கண்மாயான பத்மநாபபேரி குளத்திலிருந்து புதிய கால்வாய் அமைத்து வறட்சியாக உள்ள புங்கன்குளம், உள்பட்ட சில குளங்களும் பாசன வசதி பெறும்.

இந்த மேல்மட்டக் கால்வாய்த் திட்டத்திற்காக அப்போது ராமநதி அணையிலிருந்து ஜம்புநதி வரை அளவீடு செய்யப்பட்டு அப் பகுதியில் உள்ள பனைமரங்களில் அடையாள குறியீடும் குறிக்கப்பட்டது. வரிசையாக எல்லைக் கற்களும் நடப்பட்டன. அதன்பிறகு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் பருவமழை நேரங்களில் ராமநதி அணைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதிகமான தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

அதேசமயம் அதற்கு வடக்குப் பகுதியில் ஜம்புநதியில் உள்ள கண்மாய், குளங்கள் நிரம்புவதில்லை. ஆனால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது.

எனவே அப் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில், அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

இப்போது அந்தப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முள்செடிகள் வளர்ந்துள்ளன. இந்த மேல்மட்ட கால்வாய்த் திட்டம் நிறைவேற விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அரசுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் பலன் இல்லை.

இதுகுறித்து கீழப்பாவூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலர் இராம. உதயசூரியன் கூறியதாவது:

ராமநதியிலிருந்து வீணாகும் உபரிநீர் கடலில் கலக்கிறது. இதனால் அப் பகுதி விவசாயிகளின் குறையைப் போக்க மேல்மட்டக் கால்வாய் அமைத்து, அதன்மூலம் வெளியேறும் சுமார் 147.50 மில்லியன் கன அடி உபரிநீரை ஜம்புநதியின் இரண்டாவது அணைக்கட்டான நாராயணப்பேரி அணைக்கட்டுக்கு கொண்டுவர சுமார் |3.98 கோடி நபார்டு திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறி வருகிறது.

ஆனால் திட்டம் இன்னும் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே அரசு 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன்கருதி இந்த மேல்மட்டக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com