பண்ணை செழிக்க மண்ணைக் காப்போம்!

திருநெல்வேலி, நவ. 24: பண்ணை செழிக்க வேண்டுமானால் மண்ணைப் பாதுகாப்பது அவசியம். மண்ணின் வளமே மனித வளம். நாம் சாகுபடி செய்யும் மண், எண்ணற்ற நுண்ணுயிரிகளையும் நன்மை செய்யும் பல பாக்டீரியாக்களையும் கொண்ட உ

திருநெல்வேலி, நவ. 24: பண்ணை செழிக்க வேண்டுமானால் மண்ணைப் பாதுகாப்பது அவசியம். மண்ணின் வளமே மனித வளம். நாம் சாகுபடி செய்யும் மண், எண்ணற்ற நுண்ணுயிரிகளையும் நன்மை செய்யும் பல பாக்டீரியாக்களையும் கொண்ட உயிருட்டமுள்ளதாகும்.

 உயிரூட்டப்பட்ட மண்ணில்தான் அதிக பயிர் மகசூல் பெற முடியும். நம் முன்னோர்கள் அதிக அளவு இயற்கை உரங்களான தொழு உரம், பசுந்தாள் உரம், போன்றவற்றைப்பயன்படுத்தினர்.

 இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரித்து அம் மண் உயிரோட்டமுள்ள மண்ணாக இருந்தது. ஆனால் இப்போது நாம் ஆடு, மாடுகள் வளர்ப்பதைக் குறைத்துக் கொண்டு இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ரசாயன உரங்களை மட்டும் நம்பி விவசாயம் செய்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக மண்ணின் வளம் குறைந்து மண் ஒரு ஜடப் பொருளாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

 இயற்கை உரங்களும் ரசாயன உரங்களும் வண்டிக்கு ஒரு சக்கரம் போன்றவை. நாம் இடுகின்ற இந்த உரமானது தண்ணீரில் கரைந்து மண்ணில் ஒட்டிக் கொள்ளும். மண்ணுடன் கலந்த சத்துக்கள் நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்டு, அதன்பிறகே பயிர்கள் எடுத்து கொள்ளும் நிலைக்கு மாறுகிறது.மண்ணில் நுண்ணுயிரிகள் அதிகமாக இருந்தால்தான் நாம் இடும் உரத்திற்கு முழுப் பலன் உண்டு. மண்ணில் நுண்ணுயிரிகள் குறையும்போது எவ்வளவு உரமிட்டாலும் அந்த உரம் பயனளிக்காமல் போய் விடும்.

 மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களை ஆராய்ந்து அவற்றை சோதனை கூடங்களில் உற்பத்தி செய்து அவை உயிர்வாழ்வதற்கு ஒரு சேர்மானப் பொருளையும் உற்பத்தி செய்து அதற்கு உயிரி உரங்கள் எனப் பெயரிட்டு வேளாண் விற்பனை மையங்கள் மூலமாக மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

 தழைச்சத்து கொடுக்கக்கூடிய உயிரிஉரங்கள் அசோஸ்பைரில்லம்- பயறு வகை பயிர்களைத் தவிர அனைத்து பயிர்களுக்கும், ரைசோபியம்-பயறு பயிர்களுக்கு) மணிச்சத்து கொடுக்கக்கூடிய உயிரி உரங்கள் (பாஸ்போ பாக்டீரியா-அனைத்து பயிர்களுக்கும்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 உயிரி உரங்களைப் பயன்படுத்தும் முறைகள்:

 விதையில் கலந்து இவற்றைப் பயன்படுத்தலாம். நேரடியாகவும்மண்ணில் இடலாம். மண்ணில் உயிரிஉரங்களைத் தொடர்ந்து இட்டு வந்தால் நாம் இடும் ரசாயன உரங்களின் அளவை 20 சதம் வரை குறைத்து விடலாம்.

 மணிச்சத்து உயிரி உரம் இடுவதால் வேர் வளர்ச்சி அதிகமாகி பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். மேலும் மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிர் எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு ஏதுவாகிறது.

 தழைச்சத்து உயிரி உரம் இடுவதால் நுண்னுயிர்கள் காற்றிலுள்ள தழைத்சத்துகளை மண்ணில் நிலைப்படுத்தி பயிர் எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது.

 உயிரி உரங்கள் இடுவதால் மண்வளம் அதிகமாவதுடன் பயிர் மகசூலும் அதிகரிக்கும். மேலும் பயிருக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது.

 உயிரி உரங்கள் அனைத்தும் பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, முன்னீர்பள்ளம் மற்றும் சிவந்திப்பட்டி வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என வேளாண் உதவி இயக்குநர்

மு. வெள்ளைப்பாண்டி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com