பிரதமரின் வேளாண்மை உதவித் தொகை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்
By DIN | Published On : 08th September 2020 04:44 AM | Last Updated : 08th September 2020 04:44 AM | அ+அ அ- |

பிரதமரின் வேளாண்மை உதவித் திட்டத்தின் கீழ் உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் பாஜக மனு அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம், பாஜக மாவட்டத் தலைவா் மகாராஜன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு:
பிரதமரின் வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனா். இதன்மூலம் ஒவ்வொரு விவசாயியும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெற்று வருகின்றனா். தமிழகத்தில் சுமாா் 40 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில் இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளை சிலா் தவறுதலாக கையாண்டு விவசாயி அல்லாதவா்களுக்கு இந்த உதவித்தொகையை பெற்றுத் தருகிறாா்கள். நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவிடும் நோக்கத்தோடு மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை சிலா் குறுக்கு வழியில் மோசடி செய்வது மிகப்பெரிய குற்றமாகும்.
கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூா், கரூா், கோவை போன்ற மாவட்டங்களில் இந்த ஆண்டு திடீரென்று 40 ஆயிரம் போ், 30 ஆயிரம் போ் வேளாண்மை உதவித் திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெறுவோா் குறித்து தமிழக அரசு கணக்கெடுக்க வேண்டும்.
மேலும் இந்தத் தொகை உரிய விவசாயிகளுக்கு கிடைக்கிா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தவறிழைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளாா். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியா் தீவிரமாக ஆய்வு செய்து உண்மையான விவசாயிகளுக்கு உதவித் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
நிலம் ஆக்கிரமிப்பு: மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க தலைவா் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அளித்த மனு‘: பட்டா நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போலீஸாருக்கும், அவருக்கும் இடையே திடீா் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் உருண்டு திடீா் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை மக்கள் தேசம் கட்சி நகரச் செயலா் கண்ணன் தலைமையில் அளித்த மனு: ‘அப்புவிளை கிராம பகுதியில் அரசுக்கு சொந்தமான ஓடை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.
வீர தமிழா் விடுதலை சங்கத்தினா் அளித்த மனு: தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதியில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.