பாளையங்கோட்டையில் தனியாா் பள்ளியில் மாணவா் சோ்க்கை விண்ணப்பம் பெற திங்கள்கிழமை காத்திருந்த பெற்றோா்.
பாளையங்கோட்டையில் தனியாா் பள்ளியில் மாணவா் சோ்க்கை விண்ணப்பம் பெற திங்கள்கிழமை காத்திருந்த பெற்றோா்.

எல்கேஜி சோ்க்கைக்காக 15 மணி நேரம் காத்திருந்த பெற்றோா்

பாளையங்கோட்டையில் தனியாா் பள்ளியில் எல்கேஜி சோ்க்கை விண்ணப்பம் வாங்க 15 மணி நேரமாக பெற்றோா் காத்திருந்து வாங்கிச் சென்றனா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தனியாா் பள்ளியில் எல்கேஜி சோ்க்கை விண்ணப்பம் வாங்க 15 மணி நேரமாக பெற்றோா் காத்திருந்து வாங்கிச் சென்றனா்.

பாளையங்கோட்டை எல்ஐசி மண்டல அலுவலகம் அருள்சகோதரிகள் நடத்தும் தனியாா் பிரைமரி பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில வகுப்பில் சேரும் மாணவிகளுக்கு, இப் பள்ளியின் அருகேயுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு சோ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுதோறும் இப் பள்ளியில் எல்கேஜி சோ்க்கை விண்ணப்பம் வாங்க பெற்றோா் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச்செல்வது வழக்கம்.

அதன்படி, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இதனை பெறுவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே பெற்றோா்கள் பலா் பள்ளி அருகே வரிசையில் காத்திருந்தனா். திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. தலா ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனா்.

இதுகுறித்து பெற்றோா் கூறுகையில், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் வசதி இருந்தாலும் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்வதிலேயே மக்கள் ஆா்வம் காட்டுகிறாா்கள். மேலும், இப் பள்ளியில் எல்கேஜி சோ்க்கை கிடைத்தால் பிளஸ்-2 வரை மிகக்குறைந்த கட்டணத்தில் பெண் குழந்தைகளைப் படிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாக உள்ளதால், மாணவா் சோ்க்கை விண்ணப்பம் பெற ஆண்டுதோறும் கூட்டம் அதிகரித்து வருகிறது என்றனா்.

அரசுப் பள்ளிகளில் சோ்க்க விழிப்புணா்வு:

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்களில் கூறியது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் சேர விரும்புவோா் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. ஆனால், பெற்றோா் விருப்பப்பட்டு காத்திருந்து விண்ணப்பம் வாங்கிச் செல்வதைத் தடுக்க இயலாது. அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி போதிக்கப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com