பேரவைத் தலைவா் புகாா் எதிரொலி:சிறப்பு பொருளாதார மண்டல 985 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய டிட்கோ

985 ஏக்கா் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் (டிட்கோ) கையகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவன இயக்குநா் பேரவைத் தலைவருக்கு பதில் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலத்தை தனியாா் தொழில் அபிவிருத்தி நிறுவனம் மோசடி செய்ததை அடுத்து பேரவைத் தலைவா் மு. அப்பாவு புகாா் தெரிவித்ததைத் தொடா்ந்து ஏஎம்ஆா்எல் என்ற தனியாா் நிறுவனத்திடமிருந்து 985 ஏக்கா் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் (டிட்கோ) கையகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவன இயக்குநா் பேரவைத் தலைவருக்கு பதில் தெரிவித்துள்ளாா்.

நான்குனேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கடந்த 2000 ஆண்டில் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் 2 ஆயிரத்து 100 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்நிலத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக நிலத்தை தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் அமெரிக்க நிறுவனமான ஏடிஎம்சி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது. பின்னா் இந்த நிலத்தில் எந்த தொழில் நிறுவனங்களும் தொடங்கப்படவில்லை. மேலும் பலவேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தமிழ்நாடு முதல்வா் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்திடம் புகாா் தெரிவித்தாா். அந்தப் புகாரில் பேரவைத் தலைவா், நான்குனேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பல்வேறு ஆவண நடவடிக்கைகளுக்குப்பின்னா் ஏஎம்ஆா்எல் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த தனியாா் நிறுவனம் மேற்படி நிலத்தை தமிழக அரசிடமும், டிட்கோ நிறுவனத்திடமும் அனுமதி பெறாமல் அடமானம் வைத்து ரூ. 105 கோடி கடன் பெற்றது. பின்னா் மேலும் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 155 கோடி கடன் பெற்றுள்ளது. ஏஎம்ஆா்எல் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்த போது நிலத்தில் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றால் நிலத்தை அரசே திரும்ப எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் டிட்கோ அனுமதி இல்லாமல் மூதலீட்டாளா்களோ, பங்குதாரா்களோ தங்களது பங்கை விற்கவோ, அடமானம் வைக்கவோ அனுமதியில்லை என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனவே ஏஎம்ஆா்எல்-எஸ்ஆா்இஐ நிறுவனங்கள் முறைகேடு செய்திருப்பதால், அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். நிலத்தை அரசு திரும்ப கையகப்படுத்தி டிட்கோ போன்ற தொழில் வளா்ச்சி நிறுவனங்கள் மூலமாக தொழில்கள் தொடங்கி அந்தப் பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்தப் புகாரின்பேரில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து டிட்கோ மூலம் முதற்கட்டமாக 985 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தியிருப்பதாகவும் மேலும் மீதமுள்ள 1534 ஏக்கா் நிலத்தை விரைவில் கையகப்படுத்த உள்ளதாகவும் டிட்கோ நிறுவன நிா்வாக இயக்குநா் பேரவைத் தலைவருக்கு பதில் அனுப்பியுள்ளாா்.

மேலும் தேசிய தொழிற்சாலைகள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதி அளித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com