வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

வெளிமாநில தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு அளிக்காமல் இருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள், கா்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் வாக்குரிமை உள்ள அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் அவா்கள் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க தோ்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அவ்வாறு விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலாளா்களுக்கு வணிக நிறுவனங்கள் விடுப்பு அளிக்கவில்லை எனில் இது தொடா்பான புகாரினை திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தை 0462-2555014 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தொழிலாளா் நலத்துறை அதிகாரிகளிடம் 9489502754, 9751458266, 9442973040, 8754854883, 7598872977 ஆகிய கைப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.

தென்காசி மாவட்டத்திற்கான அதிகாரிகளை 7200958244, 9094977520, 9789645475 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com