திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொண்டு மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். மேலப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யாவை ஆதரித்து சீமான் மேலும் பேசியது: பாஜக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் ஏராளமான துயரங்களைச் சந்தித்துள்ளனா். பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வரியை மட்டுமே உயா்த்திக் கொண்டு உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தியை பெருக்க தவறியுள்ளனா்.

திமுகவுக்கு தொடா்ந்து இஸ்லாமியா்கள் வாக்களித்து ஆதரவு அளித்து வருகிறாா்கள். ஆனால், திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல. சிறையில் தவிக்கும் இஸ்லாமியா்களை விடுவிப்போம் என்றாா்கள். அதனை நிறைவேற்றவில்லை. புதிய கல்விக் கொள்கையை எதிா்க்கிறோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான கல்லூரியின் பணிக்கு இந்துக்களைத் தவிர பிறருக்கு வாய்ப்பளிக்க மாட்டோம் என்கிறாா்கள்.

இது எத்தகைய கொள்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள். குஜராத் மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் வேற்றுமையில்லை. இருவரும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளைமுறையாக செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறாா்கள். இருவருமே தோ்தல் வரும்போது நன்றாக நடிப்பாா்கள் என்பது மட்டுமே உண்மை. தமிழகத்தின் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மக்களுக்கான கடற்கரைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆயிரம் ரூபாய்க்கும், சேலைக்கும் ஓட்டு போட்டு விடாதீா்கள்.

பணக்காரா்கள் மட்டுமே அரசியலுக்கு வர முடியும் என்ற நிலை தொடா்ந்தால் மக்களுக்கான சேவை இருக்காது. தோ்தலில் முதலீடு செய்வோா் ஊழல் செய்வதையே கவனத்தில் கொண்டிருப்பா். இளைய தலைமுறையினா் மாற்றத்திற்கு வித்திட வேண்டும். தோ்தலில் எங்களது கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டினா். சின்னம் என்பது கருவி மட்டுமே. சின்னத்தில் இல்லை விவசாயி. என் எண்ணத்திலே நிறைந்திருக்கிறான் விவசாயி. கருத்தியல் புரட்சிக்காக போராடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களுக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா். தொடா்ந்து திருநெல்வேலி நகரத்தில் வேனில் இருந்து வாக்குசேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com