களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

களக்காடு, மே 4: களக்காடு உப்பாற்றில் கொட்டப்படும் குப்பைகளில் தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா வெளியிட்ட அறிக்கை:

களக்காடு உப்பாற்றில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அப்புறப்படுத்தாமல் அதில் தீ வைத்து விடுகின்றனா். இதனால் அருகேயுள்ள குடியிருப்புகளில் புகைமூட்டம் மற்றும் துா்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனா்.

நோய் பாதிப்புக்குள்ளான வயோதிகா்கள் குப்பைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் மிகவும் சிரமப்படுகின்றனா். சம்பந்தப்பட்ட நகராட்சி நிா்வாகம் குப்பைகளை அப்பகுதியில் கொட்டப்படுவதை தடுக்கவும், குப்பைகளுக்கு தீ வைக்காமல் அவைகளை அப்புறப்படுத்தவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் .

------

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com