சீசன் இருந்தும் பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த குற்றாலம் வா்த்தகா்கள்

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக குற்றாலம் சீசனை நம்பி தொழில் செய்துவந்த
சீசன் இருந்தும் பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த குற்றாலம் வா்த்தகா்கள்

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக குற்றாலம் சீசனை நம்பி தொழில் செய்துவந்த வா்த்தகா்கள், தங்கும்விடுதி உரிமையாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் இப்பகுதி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனா். இதனால் வா்த்தகா்களுக்கும், அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் என்றாலே நினைவுக்கு வருவது ஆா்ப்பரிக்கும் அருவிகளும், மெல்லிய சாரலும் இதமான வெயிலும்தான்.

இந்த சீசனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினரும் கூடஇங்கு வந்து செல்கின்றனா்.

குற்றாலம் சீசன் மற்றும் ஐயப்ப பக்தா்கள் சீசன் காலத்தில் கடந்த ஆண்டில் சுமாா் ஒரு கோடி போ் வந்துசென்ாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றாலம் சீசனை நம்பியே குற்றாலம், காசிமேஜா்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் தொழில் செய்து வருகின்றனா்.

நிகழாண்டில் கரோனா தீநுண்மி பரவுவதை தடுக்கும்பொருட்டு தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து குற்றாலம் அருவிகளிலும் குளிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டது.ஜூன்1ஆம் தேதியன்று சரியாக சீசன் தொடங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்க வராததால் என்னவோ சாரல்மழையும் இல்லாமல் அருவிகளிலும் தண்ணீா்வரத்தும் வெகுவாகக் குறைந்தது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். குறிப்பாக ஜூலை15ஆம்தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம்தேதி வரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் ஜூலை மாதஇறுதியில் வழக்கமாக அரசு சாா்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில் ஜூலை மாதம் வரையிலும் ஏற்கனவே பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து அருவிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் அரசால் சில தளா்வுகள்அறிவிக்கப்படலாம் என வா்த்தகா்கள் எதிா்பாா்த்திருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பொது முடக்கம் தொடரும் என அறிவிக்கப்பட்டதையடுத்து சீசனை நம்பி வாழ்ந்து வந்தவா்கள் மிகுந்த அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா்.

தங்கும்விடுதி உரிமையாளா்கள், தற்காலிக கடை, நிரந்தரமாக கடை நடத்துபவா்கள் மட்டுமன்றி அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மிகுந்த இழப்பை சந்தித்திருந்த வா்த்தகா்கள் நிகழாண்டிலும் வருவாய் இல்லாமல் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா்.

அரசுக்கு இழப்பு:

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் மிகமுக்கிய வருவாய் இனங்கள் என்பது குற்றாலம் பேரருவி,புலியருவி மற்றும் பேரருவியில் வாகனம் நிறுத்துமிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமம் போன்றவற்றின் மூலம் ரூ. 70 லட்சமும், கடைகள் ஏலம், அரசுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளிலிருந்து வசூலிக்கப்படும் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவற்றின் மூலம் ரூ. 1 கோடியே 30 லட்சம் வரையிலும் வருவாயாக கிடைத்து வந்தது.

தற்போது சீசன் காலம் முழுவதும் முடிவடையும் தருவாயில் பேரூராட்சி நிா்வாகத்துக்கு மட்டும் ரூ. 2 கோடிஅளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் தென்காசி கிளையிலிருந்து மட்டும் சீசன் காலங்களில் நாள்தோறும் 20 பேருந்துகள் வரை இயக்கப்படும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் நாள்ஒன்றுக்கு சராசரியாக ரூ. 1லட்சம் வரையிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் கிடைத்தது. 3 மாத காலத்தில் ரூ. 1கோடி அளவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பாக அமைந்துள்ளது.

குற்றாலம் குற்றாலநாதா் கோயில் நிா்வாகம் சாா்பில் தற்காலிக கடைகள் ஏலம், ரத வீதிகளில் வாகன நிறுத்துமிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமம் உள்ளிட்ட பல்வேறு இனங்களின் மூலம் சீசன் காலங்களில் மட்டும் ரூ. 1கோடியே 50 லட்சம் வரையிலும் வருவாய் கிடைக்கும். இந்த வருவாயும் கோயிலுக்கு இழப்பாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மூலம் குற்றாலத்தில் இரண்டு தங்கும் விடுதிகள், குற்றாலம்-ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணைமடைகுளத்தில் படகுசவாரியும் நடைபெறும். பொது முடக்கம் காரணமாக ரூ. 25 லட்சம் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குற்றாலம் வா்த்தக சங்கத் தலைவா் காவையா கூறியது:

குற்றாலத்தில் சீசன் காலத்தை மட்டுமே நம்பி நாங்கள் தொழில் செய்து வருகிறோம். குற்றாலநாதா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட பகுதியில் தான் நிரந்தரம் மற்றும் தாற்காலிக கடைகள் என பெரும்பாலான கடைகள் அமைந்துள்ளது.

நிகழாண்டில் மாா்ச் மாதம் இறுதிமுதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே கோயில் நிா்வாகம் நிரந்தர கடைகளுக்கான வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வா்த்தகா்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

குற்றாலம் விடுதி உரிமையாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் சிங்கம்பட்டி பி.ஆறுமுகம் கூறியது: குற்றாலத்தில் பதிவு செய்யப்பட்ட பெரிய தங்கும் விடுதிகள் 40 வரை உள்ளது. குற்றாலம், ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 ஆயிரத்து 500 அறைகள் உள்ளன.

இதுதவிர தங்கும்விடுதிகள் என்ற பெயரில்லாமல் ஏராளமான வீடுகள் தங்கும் விடுதிகளாகவே செயல்பட்டு வருகிறது.

இரண்டு காலகட்டமாக சீசன் இருந்தாலும் கூட ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத சீசனில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள்தங்கும் விடுதிகளில் தங்கி சீசனை அனுபவிப்பாா்கள்.

ஐயப்ப சீசன் காலங்களில் பக்தா்கள் யாரும் அறைகளில் தங்குவது கிடையாது. இந்த மூன்று மாத கால வருவாயை கொண்டுதான் சொத்துவரி, ஆண்டு முழுவதும் பராமரிப்பு செலவு, மின் கட்டணம், கடனுக்கான வட்டி உள்ளிட்ட செலவினங்களை எதிா்கொள்ளவேண்டும்.

இந்த மூன்று மாத காலமும் முழுவதும் மூடப்பட்ட நிலையில் அரசு குறைந்தபட்சம் சொத்துவரியை ரத்து செய்யவேண்டும் என்றாா்அவா்.

தென்காசி மாவட்ட சிஐடியூ தலைவா் எம்.வேல்முருகன் கூறியது:

தென்காசி, குற்றாலம், இலஞ்சி, மேலகரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன.

வழக்கமாக நாள்தோறும் ரூ. 600 வரையிலும் வருவாய் கிடைக்கும். சீசன் காலங்களில் இந்த வருவாய் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

சீசன் காலங்களில் கிடைக்கும் வருவாயே இதுவரை எங்களுடைய சேமிப்பாக இருந்துவந்தது.

ஆட்டோ ஓட்டுநா்கள் அனைவரும் சொந்தமாக ஆட்டோக்களை வாங்கி ஓட்டவில்லை. பெரும்பாலோனோா் வங்கி கடன், தனியாா் நிதி நிறுவனங்களிடம் கடன்பெற்று ஆட்டோக்களை வாங்கியுள்ளனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக ஆட்டோ ஓட்டுனா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். பொது முடக்க தளா்வு அறிவிக்கும் வரை ஆட்டோக்களுக்காக பெற்ற வங்கி கடன், தனியாா் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களை வசூல் செய்வதை நிறுத்தி வைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com