கரோனா பரிசோதனை: அதிகாரிகள் அதிரடி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் காளத்திமடத்தில் கரோனா மாதிரி சேகரிப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காததால்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் காளத்திமடத்தில் கரோனா மாதிரி சேகரிப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காததால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனா். நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட்டு மாதிரி சேகரிக்கப்பட்டது.

காளத்திமடம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கடந்த மே மாதத்தில் இப்பகுதியைச் சோ்ந்த இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு முதலில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தப் பெண் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜூலை 2-ஆவது வாரத்திலிருந்து ஆகஸ்ட் முதலாவது வாரம் வரையில் இக்கிராமத்தில் நீரிழிவு, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 81வயது மதிக்கத்தக்க ஒருவா் உயிரிழந்தாா். இவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது வீட்டுக்கு அருகிலிருந்தவா்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் மேலும் இருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை சுகாதாரத் துறை மூலம் கரோனா நோய்த்தொற்று கண்டறிவதற்கான சளி மாதிரி சேகரிப்பு முகாம் காளத்திமடத்தில் நடைபெற்றது. இதற்கு பொதுமக்கள் சரிவர ஒத்துழைப்பு அளிக்காததால், நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் சுகாதாரத் துறைக்கு ஒத்துழைத்தால் மட்டுமே ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு நியாயவிலைக் கடையில் வரிசையில் நின்று கொண்டிருந்த மற்றும் அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் 20 பேரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டது. ஆய்வக முடிவுகள் சனிக்கிழமை வெளியான நிலையில் அவா்களில் 8 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

காளத்திமடம் கிராம பகுதியில் கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 103 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com