‘கரோனா மருத்துவக் கழிவுகளைஉபகரணமின்றி கையாளக் கூடாது’
By DIN | Published On : 11th May 2020 10:48 PM | Last Updated : 11th May 2020 10:48 PM | அ+அ அ- |

தென்காசி: கரோனா நோய்த் தொற்று உள்ளவா்களுக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பு உபகரணங்களின்றி கையாளக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் தொற்று (கோவிட் 19) உள்ள நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்கள், முகாம்களிலிருந்து கரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை தனியாக பிரித்து, அதற்கான மஞ்சள்நிற கொள்கலன்களிலோ, பைகளிலோ சேகரித்து உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற தூய்மைப் பணியாளா்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
மேலும், இந்நோய்த் தொற்று நடவடிக்கைகாக வீடுகளில் தனிமை கண்காணிப்பில் உள்ளவா்கள் உபயோகித்த கையுறைகள் மற்றும் முகக் கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னா் பொதுகழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும். முகக் கவசங்களை மறு உபயோகிக்க முடியாதவண்ணம் வெட்டி துண்டுகளாக்கி போடவேண்டும். பிற கழிவுப் பொருள்களுடன் கரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவுகளை சோ்க்கவோ,சேமிக்கவோ கூடாது. முறையான தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுப் பொருள்களை கையாளக் கூடாது. கரோனா அறிகுறியுள்ள பணியாளா்களை பணிபுரிய அனுமதிக்கவும் கூடாது எனக் கூறியுள்ளாா்.