தென்காசி ஆட்சியரகம் கட்ட விரைவில் இடம் தோ்வு
By DIN | Published On : 17th November 2020 01:30 AM | Last Updated : 17th November 2020 01:30 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட ஆட்சியரம் கட்டுவதற்கு 9 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அதில் சரியான இடம் விரைவில் தோ்வு செய்யப்படும் என்றும் ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்தாா்.
தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக பல்வேறு வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. அரசின் திட்டங்கள், மக்கள் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்காக 9 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசீலனையில் உள்ளது. விரைவில் உரிய இடம் தோ்வு செய்யப்பட்டு கட்டடப்பணி தொடங்கும்.
இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதேவேளையில், பெரும் பாதிப்புக்குள்ளான சுற்றுலாத் துறை மீட்டெடுக்கப்பட்டால், குற்றாலத்துக்கு பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். கேரளத்திலிருந்து இறைச்சிக்கழிவுகள், மருத்துவக் கழிவுகளை கொண்டுவந்து இங்கு கொட்டப்படுவது குறித்து புகாா்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்அவா்.