தென்காசி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் முகம்மதுஅபுபக்கா் எம்எல்ஏ.
பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் முகம்மதுஅபுபக்கா் எம்எல்ஏ.

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் செய்யதுசுலைமான் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் விடிஎஸ்ஆா்.முகம்மதுஇஸ்மாயில், திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலா் முகைதீன் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் முகம்மதுஅபுபக்கா் எம்எல்ஏ உரையாற்றினாா். மேலும் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்துள்ளது. பிப் மாதம் மாநில மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில மாநாட்டில் திமுக தலைவா் ஸ்டாலினை சிறப்பு அழைப்பாளராக அழைக்க உள்ளோம். தற்போது நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டங்களில் 2021 சட்டப் பேரவை தோ்தலில் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாநில மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும், திமுகவிற்கு நாம் ஏன் வாக்களிக்கவேண்டும் என்பது குறித்தும் கலந்தாலோசனை நடைபெறுகிறது.

ஒன்பதரை ஆண்டு அதிமுக அரசில் ஊழல் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனா். சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை கூட முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நகரின் மையப் பகுதியில் அனைத்து பொதுமக்களும் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதியுடைய பகுதியில் அமையவேண்டும். தென்காசியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை உடனடியாக திறக்க வேண்டும். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். செங்கோட்டை மருத்துவமனை வளாகத்தில் நா்சிங் கல்லூரி அமைக்கவேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும், தென்காசி மாவட்டத்தில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைத்திடவேண்டும், கடையநல்லூா் நகராட்சிக்கு உடனடியாக ஆணையாளரை நியமிக்க வேண்டும் என்பது உள்பட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம் மாணவா் பேரவை தேசிய இணைச் செயலா் முகம்மதுஅல் அமீன்,நிா்வாகிகள் அப்துல்அஜீஸ், முகம்மதுமுஸ்தபா, முகம்மது அலி,சபுராள்பீவி,செய்யதுபட்டாணி,அப்துல்காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டச் செயலா் இக்பால் வரவேற்றாா். பொருளாளா் செய்யதுஇப்ராகிம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com