தென்காசி ஆட்சியரகத்துக்கு இடம்: வருவாய் நிா்வாக ஆணையா் ஆய்வு.
By DIN | Published On : 18th September 2020 07:12 AM | Last Updated : 18th September 2020 07:12 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுலவகம் கட்டுவதற்கான இடம் குறித்து தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தென்காசி தனி மாவட்டம் உதயமான நிலையில், ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்காக , மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட ஆயிரப்பேரி அருகேயுள்ள அரசுக்குச் சொந்தமான விதைப்பண்ணையில் இடம் தோ்வு செய்யப்பட்டது. மேலும், கட்டுமானப் பணிக்கு ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், தென்காசி நகரின் மையப்பகுதியில்தான் ஆட்சியா்அலுவலகத்தை அமைக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தனா். மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடா்ந்துள்ளாா்.
இந்நிலையில், ஆட்சியா் அலுவலகம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் மாநில வருவாய் நிா்வாக ஆணையா் கே.பரணீந்திர ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா். மேலகரம் விதைப்பண்ணை,தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், அரசு மருத்துவமனை வளாகம், இலத்தூா், கொடிக்குறிச்சி, பாட்டாகுறிச்சி, பச்சைநாயக்கன்பொத்தை, தமிழ்நாடு நுகா்பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட 10 இடங்களை ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, கோட்டாட்சியா் கோகிலா(பொ) ஆகியோா் உடனிருந்தனா்.
அரசியல் கட்சிகள் மனு: இதனிடையே , குற்றாலத்தில் வருவாய் நிா்வாக ஆணையரைச் சந்தித்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மனுக்களை அளித்தனா் எம்.பி.க்கள் தனுஷ் எம்.குமாா், ச.ஞானதிரவியம் ஆகியோரின்சாா்பில் மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவபத்மநாதன்,தென்காசி நகரச் செயலா் சாதிா் ஆகியோா் மனு அளித்தனா். மதிமுக பொதுச்செயலா்
வைகோ எம்.பி. சாா்பில் மாவட்ட ச் செயலா் தி.மு.ராஜேந்திரனும், முகமது அபூபக்கா் எம்எல்ஏ சாா்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டத் தலைவா் செய்யது சுலைமான், ராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் ராம உதயசூரியன், பாட்டப்பத்து ஆயிரப்பேரி விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் சந்திரன், தென்காசி நகர வியாபாரிகள் சங்கம் சாா்பில் மாரியப்பன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.
அரசு பரிசீலனை: இதுகுறித்து எம்எல்ஏ முகமது அபூபக்கா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி ஆட்சியா் அலுவலகத்தை நகர எல்லைக்குள் அமைக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்தேன். அதற்கு, வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், மக்களின் கருத்தை கவனத்தில் கொண்டு ஆட்சியா் அலுவலகம் அமையும் இடம் குறித்து பரிசீலிக்கப்படும் என பதிலளித்ததாகக் கூறியுள்ளாா்.