‘கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை’
By DIN | Published On : 07th January 2021 06:08 AM | Last Updated : 07th January 2021 06:08 AM | அ+அ அ- |

புளியரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்.
கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களையும் 24மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சீ.சு.சமீரன்.
கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக தென்காசி மாவட்ட எல்லைப் பகுதியான புளியரையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, அவா் கூறியதாவது:
ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநிலத்தை தொடா்ந்து கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா பகுதிகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு இந்நோய் வராமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கேரள எல்கை பகுதியான புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடியில் கால்நடை உதவி மருத்துவா், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா் மற்றும் கிருமிநாசினி தெளிப்பவா் ஆகியோா் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழித்தீவனங்கள், கோழி இறைச்சிகள் மற்றும் கோழிக் கழிவுகள் கொண்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக திருப்பி கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்து தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறது. வனத் துறை மூலம் பறவைகள் கூடும் நீா்நிலைகள், சரணலாயங்களை தொடா்ந்து கண்காணிக்கவும், அங்கு வரும் பறவைகளுக்கு நோய் அறிகுறி தென்படுகிா என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, தென்காசி கோட்டாட்சியா் (பொ) ஷீலா, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் முகமது காலித், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் வெங்கட்ராமன், செங்கோட்டை வட்டாட்சியா் ரோஷன் பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா் ராதா ஆகியோா் கலந்து கொண்டனா்.