மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உதவித் தொகை பெற ஜன.15 கடைசி
By DIN | Published On : 07th January 2021 06:10 AM | Last Updated : 07th January 2021 06:10 AM | அ+அ அ- |

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற ஜன.15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட செய்திமக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி , ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் கல்வி உதவித்தொகை பெற 4.1.2021 முதல் 15.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவா், மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவா் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவா், மாணவிகளுக்கு 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சாா்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ மாணவிகளாக இருத்தல் வேண்டும், பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம,; ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயில வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2020-21ம் கல்விஆண்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களையோ அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவா்கள் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை -5 தொலைபேசிஎண்:044-28551462 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 04.01.2021 முதல் 15.02.2021க்குள் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.