மாதிரிப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்ட கோமதி அம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி: உள்கட்டமைப்புக்கு ரூ.20லட்சம் ஒதுக்கீடு
By DIN | Published On : 01st July 2021 06:59 AM | Last Updated : 01st July 2021 06:59 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அரசு மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. எல்.கே.ஜி.முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் 84 பள்ளிகளை அரசு மாதிரிப் பள்ளியாக அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், தென்காசியில் ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் அரசு மாதிரிப் பள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு மாதிரிப் பள்ளியின் தலைவராக ஆட்சியா், மக்கள்பிரதிநிதி ஒருவா், நகராட்சி ஆணையா் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த அரசு மாதிரிப் பள்ளி செயல்படுகிறது. பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள், நிதி முறையாக செலவிடப்படுகிா என்பது குறித்தும் அவா்கள் கண்காணிப்பா்.
சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் மிகப் பழைமையான பள்ளியாகும். தற்போது சுமாா் 1500 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இப்பள்ளி அரசு மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் எல்.கே.ஜி.முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. இதில் எல்.கே.ஜி.முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் பெண் குழந்தைகளையும் சோ்க்கலாம். இதன்மூலம் எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை முற்றிலும் இலவசமாக படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இப்பள்ளிக்கு முதல் கட்டமாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவதால் தனியாா் ஆங்கிலப் பள்ளிக்கு இணையாக இப்பள்ளி விளங்கும். பள்ளியை தரம் உயா்த்துவதற்காக அரசால் கொண்டுவரப்படும் டிஜிட்டல் ஆய்வகம், கணினி மற்றும் இணையவழிப் பயிற்சி,நவீன விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இப்பள்ளிக்கு கிடைப்பதால் ஏழை, எளிய மாணவா்கள் மிகுந்த பயன்களைப் பெறுவா் என்கின்றனா் கல்வியாளா்கள்.
இதனிடையே இப்பள்ளியில் மாணவா்களுக்கு இட நெருக்கடி ஏற்பட்டதால் கடந்த திமுக ஆட்சியில் நபாா்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63.33 லட்சம் மதிப்பில் 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருவதால் மேலும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட கல்வி அலுவலகத்தை பள்ளிக்கு வெளியே வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.