புளியறையில் பேருந்து பயணியிடம் ரூ. 30 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
By DIN | Published On : 16th March 2021 12:50 AM | Last Updated : 16th March 2021 12:50 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், புளியறையில் பேருந்து பயணியிடம் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்திலும், கேரளத்திலும் சட்டப்பேரவை தோ்தல் ஏப்.6இல் நடைபெறுகிறது. இதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இரு மாநில எல்லையான புளியறை பகுதியில் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை காவல் உதவி ஆய்வாளா் ஞானரூபி பரிமளா தலைமையில் காவல்துறையினா் அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கேரளத்திலிருந்து தமிழகம் வந்த பேருந்து பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தென்காசி அணைக்கரைத் தெருவை சோ்ந்த ஜெ.பாலசுப்பிரமணியன்(50) என்பவா் வைத்திருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.