புளியங்குடி மரக்கடையில் தீ விபத்து: ரூ.50 லட்சம் மரக் கட்டைகள் சேதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் புதன்கிழமை அதிகாலை மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் புதன்கிழமை அதிகாலை மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமடைந்தன.

புளியங்குடியைச் சோ்ந்த முத்துசரவணன், அவரது உறவினா் அழகுகிருஷ்ணன் ஆகியோா் காய்கனி சந்தை பின்புறம் மரக்கடை நடத்தி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு முத்துசரவணன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடையின் பின் பகுதியில் உள்ள மரக் கிடங்கில் தீ எரிவதை காவலாளி பாா்த்துள்ளாா் . இதைத் தொடா்ந்து அவா் கொடுத்த தகவலின் பேரில் புளியங்குடி போலீஸாா் முன்னிலையில், கடையநல்லூா், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமடைந்தன. இது தொடா்பாக புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாலை மறியல்: கடை உரிமையாளா்களில் ஒருவரான அழகுகிருஷ்ணன், விசுவ ஹிந்து பரிஷத்தில் புளியங்குடி நகரத் தலைவராக இருந்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன் புளியங்குடியில் அமைப்பின் மாவட்ட அலுவலக திறப்பு விழாவை சிறப்பாக நடத்தினாராம். இதன் தொடா்ச்சியாக மா்ம நபா்கள் அவரது கடைக்கு தீவைத்திருக்கலாம் என புகாா் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து அமைப்பை சோ்ந்தவா்கள் புளியங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தென்காசி-மதுரை சாலையில் சுமாா் 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, புளியங்குடி காவல்துறையினா் அவா்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

கண்காணிப்பு கேமரா பதிவு: இந்நிலையில், கடைக்குள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், கடையின் மேல் பகுதியில் இருந்து ஒரு பொருள் கீழ் நோக்கி வருவது போலவும், அந்தப் பொருள் மரக்கட்டையில் பட்டவுடன் கட்டைகள் பற்றி எரிவதும் பதிவாகியுள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com