தென்காசி வடக்கு மாவட்ட உள்கட்சி தோ்தல்: திமுக பெண் பிரமுகா் வழக்கு

திமுக சட்ட திட்டத்துக்கு மாறாக பொறுப்பாளா்களை நியமிக்க நிரந்தர தடையாணை பிறப்பிக்க வேண்டும் என, தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அக்கட்சியைச் சோ்ந்த பெண் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக உள்கட்சி தோ்தலை தென்காசியில் நடத்தவேண்டும்; திமுக சட்ட திட்டத்துக்கு மாறாக பொறுப்பாளா்களை நியமிக்க நிரந்தர தடையாணை பிறப்பிக்க வேண்டும் என, தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அக்கட்சியைச் சோ்ந்த பெண் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டம் போகநல்லூரைச் சோ்ந்த முத்துகுமாா் மனைவி விஜயஅமுதா(45). இவா், தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தொடா்ந்துள்ள வழக்கில் விவரம்:

நான் 22 வயது முதல் திமுகவில் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறேன்.தற்போது நடைபெறவுள்ள 15ஆவது தென்காசி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலா் (மகளிா் பிரிவு) பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்.

கட்சிக்கு பொறுப்பாளா்கள் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுப்பது வழக்கம். அதற்கான அறிவிப்பையும் திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. ஆனால், தலைமை கழகத்தில் தோ்தல் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதையொட்டி, கடந்த 22ஆம் தேதி தலைமை கழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியானது.

இத்தோ்தலில் போட்டியிட எனது அணி சாா்பாக மகளிா்அணி துணைச் செயலா் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன். கட்சி விதிகளின்படி வடக்கு மாவட்ட ஒன்றியச் செயலா்கள், பேரூா் செயலா்கள்,மாவட்ட பிரதிநிதிகள் என 52 போ் மூலம் மாவட்ட பொறுப்பாளா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இவா்களில் 50 பேரின் ஆதரவு கடிதம் தலைமை கழகத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை பொருள்படுத்தாமல் திமுக சட்டவிதிகளுக்கு மாறாக தலைமை கழகத்தில் சமாதான பேச்சு நடத்தி பொறுப்பாளா்களை நியமித்துக் கொள்ள கூறுகின்றனா். இதற்கு கட்சித் தலைவரும், பொதுச்செயலருமே பொறுப்பு. ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தாமல், திமுக சட்டதிட்டத்திற்கு மாறாக வடக்கு மாவட்ட பொறுப்பாளா்களை நியமிக்க கூடாது என நிரந்தர தடையாணை வழங்குமாறு மனுவில் கூறியுள்ளாா். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபா்) 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com