இரட்டைக்குளம், வீராணம் கால்வாய்திட்டப் பணிகளை விரைவுபடுத்த திமுக கோரிக்கை
By DIN | Published On : 25th August 2022 12:22 AM | Last Updated : 25th August 2022 12:22 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் இரட்டைக்குளம், வீராணம் கால்வாய் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷிடம், திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்தாா்.
அதன் விவரம்: இரட்டைக்குளம் கால்வாய் திட்ட பணிக்கு ரூ.45.12 கோடி மதிப்பில் தயாா் செய்யப்பட்டு பொதுப்பணித் துறை முதன்மை அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்டு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோன்று வீராணம் கால்வாய் திட்டப் பணிக்கு ரூ.15.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிதித்துறை ஒப்புதலுக்காக உள்ளது. மேற்கண்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதிய இருப்பிடம் இல்லாமல் மரத்தடியில் கல்வி கற்று வருகின்றனா். அந்த ஊரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாலாங்கட்டளையில் இயங்கி வரும் உயா்நிலைப் பள்ளியில் கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். ஊத்துமலை மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்து வசதி, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
கடையம் ஒன்றியம் அணைந்தபெருமாள்நாடனூா் ஊராட்சி சொக்கலிங்கபுரத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சீவநல்லூா் சாமித்துரை, தொழிலதிபா் பாலகிருஷ்ணன், பேரூா் கழக செயலா் ஜெகதீசன், ஐயம்பெருமாள், அய்யனாா், தென்காசி நகர கலை இலக்கிய பேரவை அமைப்பாளா் ராமராஜ் இளைஞரணி பொன் மோகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.