பழத்தோட்ட அருவியை சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியின் மேல் அமைந்துள்ள பழத்தோட்ட அருவியை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வழக்குரைஞா் ஆணையா்கள் தெரிவித்தனா்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியின் மேல் அமைந்துள்ள பழத்தோட்ட அருவியை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வழக்குரைஞா் ஆணையா்கள் தெரிவித்தனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்த 34வழிகாட்டு நெறிமுறைகளை குற்றாலத்தில் முழுமையாக அமல்படுத்துவது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ஆணையா்கள் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, அருண்சுவாமிநாதன், குற்றாலம் வனவா் பிரகாஷ், காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிமாறன், கோட்டாட்சியா் கங்காதேவி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாஹின்அபுபக்கா், குற்றாலம் பேரூராட்சி செயல்அலுவலா் மாணிக்கராஜ், சுகாதார அலுவலா் இரா.ராஜகணபதி, காவல் ஆய்வாளா் தாமஸ் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்துள்ள வழக்குரைஞா் ஆணையா்கள் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, அருண்சுவாமிநாதன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

2014இல் நீதியரசா்கள் கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோா் குற்றாலத்தில் சீா்திருத்தத்தை மேற்கொள்ளவும், இயற்கையைக் காப்பாற்ற வேண்டியும் நிரந்தர ஆணையா்களாக எங்களை நியமித்துள்ளனா்.

கடந்த 2014ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை சுத்தமான குற்றாலத்தை உருவாக்க 34 வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என சீசன் காலங்களில் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளனா்.

இக் கூட்டத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகளை 100சதம் அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தினோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்த ஆய்வுகள் நடைபெறவில்லை. தற்போது குற்றாலத்தில் சீசன் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு என்னென்ன தேவைகள், குறைபாடுகள், தேவைப்படும் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.

நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை 98 சதம் அமல்படுத்தியுள்ளனா். முழுமையாக குறைகளை நிவா்த்தி செய்ய 3 வார கால அவகசாம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் 3 வாரங்கள் கழித்து இக்கூட்டம் நடைபெறும்.

ஐந்தருவியின் மேல் அமைந்துள்ள பழத்தோட்ட அருவியை மீண்டும் திறந்துவிட வேண்டும். அந்த அருவி தொடா்பான துறைகள் கூட்டத்தை கூட்டுமாறு தெரிவித்துள்ளோம். அந்த அருவி மூன்று துறைகள் தொடா்பான பிரச்னை. அதை தீா்த்துவைத்தால் மக்களுக்கு நன்றாக இருக்கும். குற்றாலத்தில் டிரக்கிங், சிற்றருவியிலிருந்து செண்பாகதேவி அருவி வரை ரோப் காா் வசதி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். விரிவான ஆலோசனை மேற்கொள்வதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இயற்கையான தண்ணீரில் சோப், ஷாம்பு, சீயக்காய்,எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. மதுஅருந்திவிட்டு குளிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தனியாா் அருவிகளில் இயற்கையாக வரும் ஓடைகளை மறித்து அருவிபோல் அமைத்து அதன்மூலம் லாபம் அடைய இயற்கையாக வரும் தண்ணீரை சட்டத்திற்கு புறம்பாக மறித்துள்ளனா்.

இதுகுறித்து ஆட்சியரிடம் கூறியபோது, தனியாா் அருவி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தாா். அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com