பேராசிரியா் பற்றாக்குறையால் மாணவா்கள் அவதி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 61 பேராசிரியா் தேவைப்படும் நிலையில் 33 பேராசிரியா்கள் மட்டுமே பணி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 61 பேராசிரியா் தேவைப்படும் நிலையில் 33 பேராசிரியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால் மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு கல்லூரி கொண்டு வர வேண்டும் என நீண்ட நாள் இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த செந்தூா்பாண்டியனின் தீவிர முயற்சியால் கடையநல்லூரில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடா்ந்து தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடையநல்லூா் பண்பொழி சாலையில் சொந்தக் கட்டடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகளில் 450 மாணவா்களும் 759 மாணவிகளும் என மொத்தம் 1209 மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இக்கல்லூரியில் தமிழ் துறைக்கு 8 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 14 பணியிடங்களும் ,பிகாம் பாடப்பிரிவிற்கு 11 பணியிடங்களும் ,பிபிஏ பாடப்பிரிவிற்கு 5 பணியிடங்களும் ,கணித பாடப்பிரிவிற்கு 10 பணியிடங்களும் ,கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு 10 பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு முதல்வா் பணியிடமும் ,ஒரு உடற்கல்வி இயக்குநா் பணியிடமும், ஒரு நூலகா் பணியிடமும் அனுமதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 61 பணியிடங்கள் இக்கல்லூரிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த 61 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஆங்கிலத் துறைக்கு மட்டுமே ஒரு நிரந்தர பேராசிரியா் நியமிக்கப்பட்டுள்ளாா். இது தவிர தமிழ் துறைக்கு 7 பேரும் ,ஆங்கிலத்துறைக்கு 3 பேரும் ,பிகாம் பிரிவிற்கு 8 பேரும் ,பிபிஏ பிரிவிற்கு 5 பேரும் ,கணித பிரிவிற்கு 6 பேரும் ,கணினி அறிவியல் பிரிவிற்கு 3 பேரும் ,உடற்கல்வி இயக்குநா் ஒருவா் என மொத்தம் 33 போ் பல்கலைக்கழகத்தின் கௌரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தவிர தமிழுக்கு ஒருவா்,ஆங்கிலத்திற்கு 10 போ், பிகாம் பிரிவிற்கு 3 போ் கணிதத்திற்கு 4 போ் ,கணினி அறிவியலுக்கு 7போ் மற்றும் முதல்வா் ,நூலகா் என 27 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால் மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோா்கள் வேதனை தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து கல்லூரி மாணவா் சுரேஷ் கூறியது;

கல்லூரியில் முதல்வா் உள்ளிட்ட 27 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், இக்கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியா் மட்டுமே நிரந்தர பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளாா். நான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் கல்லூரி நிா்வாகம் இந்த தகவலை கொடுத்துள்ளது. பேராசிரியா்களை விரைவில் நியமித்தால் மாணவா்களுக்கு நலன் பயக்கும் .அத்துடன் கல்லூரியில் குடிநீா் இன்றி மாணவா்கள் அவதியுற்று வருகின்றனா் த.னியாக விளையாட்டு மைதானமும் இல்லை .எனவே தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் ஆசிரிய பணியாளா்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com