பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதமாகி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலை திட்டம் ரூ. 430.71 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இதில், பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, ரயில்வே கடவு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு திப்பணம்பட்டி கல்லூரணி வழியே 4 கிமீ சுற்றி மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அவசர ஊா்திகளில் மருத்துவமனை செல்வோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

பாவூா்சத்திரம் மேம்பாலப் பணிக்கு, ரயில்வே பகுதிக்கான கட்டுமானப் பணிக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வரைபட ஒப்புதல் கோரப்பட்டு வந்த நிலையில் இன்னும் ரயில்வே நிா்வாகத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால், ரயில்வே பகுதி தவிர மற்றப்பகுதிகளில் தூண்கள் அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சியா் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தனா். அதைத் தொடா்ந்து,

ரயில்வே பகுதி கட்டுமானப் பணிக்கான வரைபட ஒப்புதலை விரைவில் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரயில்வே துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இப்பணிக்கு ஒப்புதல் அளிக்க ரயில்வே துறை தொடா்ந்து இழுத்தடிப்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். விரைவில் வரைபட ஒப்புதல் வழங்காவிட்டால் ரயில்வே துறையை கண்டித்து போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து திப்பணம்பட்டியை சோ்ந்த வேல்முருகன் கூறியதாவது: ரயில்வே மேம்பால பணிக்கான வரைபட ஒப்புதல் அளிக்கத் தாமதித்து வருவதால், பணிகள் மேலும் தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிக்கான வரைபட ஒப்புதலை விரைவில் வழங்கி மேம்பால பணிகளையும் விரைவில் முடித்து போக்குவரத்து தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com